திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் சிறிய குன்றின்மீது இந்த கோவில் அமையப்பெற்றுள்ளது. ராமாயண தொடர்பு ராமபிரான் வனவாசக் காலத்தில், இத்தலத்தில் சில காலம் தங்கினார். ராமரும் சீதையும் இங்கே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் நீராடி விட்டு பூஜைகள் செய்யும் வழக்கம் கொண்டிருந்தனர். ஒரு சமயம் சீதா பிராட்டி கொசஸ்தலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது இந்தப் பகுதியில் வாழ்ந்த மகிஷாசுரன் எனும் அசுரன், குளித்துக் கொண்டிருந்த சீதையின் மீது மோகம் கொண்டு, அவளின் திருமேனியைத் தொட வந்தான். பயத்தில் சட்டென மேலேறி அமர்ந்திருந்த ஸ்ரீராமரின் மடியில் சென்று அமர்ந்தாள் சீதா பிராட்டி. நிலைமையை உணர்ந்த ஸ்ரீராமர், எருமை வடிவம் கொண்ட மகிஷாசுரனை வதம் செய்து அழிக்க எண்ணினார். மகிஷாசுரனோ ஏற்கனவே கடும் தவம் செய்து சிவபெருமானிடம் ஒரு வரம் பெற்றிருந்தான். அதன்படி, பெண்களால் மட்டுமே அவனது உயிரைப் பறிக்க முடியும். ஆகவே அசுரனை அவனது வரத்தின்படியே வதம் செய்யும் நோக்கத்தில், ஸ்ரீராமர் ஆற்று தீரத்தத்திலிருந்த தர்ப்பைப் புல்லை எடுத்து நான்காகக் கிள்ளி அவன் மீது ஏவினார். அவை பெண் தெய்வங்களாக மாறின. அதாவது அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மொலகாத்தம்மன், காட்டு கச்சியாத்தம்மன் ஆகிய நான்கு பெண் தெய்வங்களாக மாறின. அவர்களுக்கு அங்காளம்மன் தலைமை ஏற்றாள். அங்காள பரமேஸ்வரியின் தலைமையிலான இந்த நான்கு பெண் தெய்வங்களும் இணைந்து அசுரனை வதம் செய்ததாக ஆன்மீகக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளன. அதனால் இத்தலம் ஆதி நாளில் மகிஷாசுரமர்த்தனம் என்று அழைக்கப்பட்டது. பின் மருவி மகிசாசுரபுரி என்றானது. இதுவே தமிழில் `எருமைவெட்டிபாளையம்' என அழைக்கப்படுகிறது என்கிறார்கள். சீதா பிராட்டியை மடியில் அமர்த்திய கோலத்தில் கோதண்டராமர் சாளக்கிராம திருமேனி ஸ்ரீ ராமர் கோவில் கொண்டிருக்கும் எழில்மிகு குன்றினை அடைய கருங்கல் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இங்குள்ள மூலவர் ராமர், சீதா பிராட்டியைத் தன் மடியில் இடதுபுறம் அமர்த்தி, அந்த அன்னையை அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். வேறெங்கும் காண்பதற்கரிய வடிவமாக மூன்றடி உயர சாளக்கிராமத்தில் இவரின் திருமேனி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மாநிலம் தெலுங்கானாவில் பிரசித்திபெற்ற பத்ராசலம் தலத்தில் உள்ளது போன்ற அமைப்பாகும். இறைவன் அர்ச்சாவதார மூர்த்தியாகவும், பட்டாபிஷேக திருக்கோலத்திலும் உள்ளார். ராமபிரான் பத்மாசனத்திலும், சீதை பிராட்டி தாயார் இடது மடியிலும் அமர்ந்துள்ளனர். இளையபெருமாளும், சிறிய திருவடி ஆஞ்சநேயரும் அவருக்கு வலது பக்கத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். ராமபிரான் சீதையைக் காத்தது போன்று, நம்பிக்கையோடு இவ்வாலயம் வந்து தன்னை வழிபடும் பெண்களுக்கும் அபயமளித்து அருள்பாலித்து வருகிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ரகுநாத பெருமாள் அர்த்த மண்டபத்தில் லக்ஷ்மி நாராயணன் மற்றும் ஆழ்வார்கள் சந்நிதி கொண்டுள்ளனர். கோஷ்டத்தில் விநாயகர், வராஹ மூர்த்தி, மகா விஷ்ணு மற்றும் துர்கை ஆகியோர் உள்ளனர். விஜய நகர பேரரசர்கள் இந்த ஆலயத்துக்கு மண்டபம் முதலியன கட்டித்தந்தது பற்றிய கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன விஜயநகர கால கல்வெட்டின்படி, இந்த மலை ராமகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீ ரகுநாத பெருமாள் என்று அழைக்கப்பட்டுள்ளார். முற்காலத்தில் இக்கோவில் 7 பிரகாரங்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான கோவிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தெலுங்கானாவில் உள்ள பத்ராசலத்திற்குச் செல்ல முடியாத பக்தர்கள் இங்கு தங்கள் பிரார்த்தனையைச் செய்யலாம். திருவள்ளூர் வீரராகவ ஸ்வாமி ஒரு நாள் மண்டகப்படிக்காக எருமைவெட்டிபாளையத்திற்கு வருவது வழக்கம். பிரார்த்தனைகள் குழந்தை பாக்கியம் வேண்டி நிற்கும் தம்பதியினரும், உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இங்கு தரிசித்து பூஜைகள் செய்வதன் மூலம் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அமைவிடம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் எருமைவெட்டிப்பாளையம் அமைந்துள்ளது. காரனோடையிலிருந்து சுமார் 6.5 கி.மீ, பொன்னேரியிலிருந்து 18 கி.மீ, செங்குன்றத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/erumaivettipalayam-sri-kothanda-ramaswamy-temple




