சென்னை, அங்கத்தை அலங்கரிக்கும் தங்கம் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதப்படுகிறது. குறை இருந்தாலும் நிறை செய்யும் என்பதால் எந்த மங்களகரமான நிகழ்ச்சி என்றாலும் பேசுபொருளாக இருப்பது இந்த மஞ்சள் உலோகம் தான். இது எல்லாவற்றையும்விட ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கும் தங்கம்தான் கைகொடுக்கிறது. இதுபோன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை எவ்வளவு எகிறினாலும், அதன் விற்பனை மட்டும் குறையவே இல்லை. இப்போதெல்லாம் குடும்பங்களில், அதிலும் குறிப்பாக விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்களை நடத்துபவர்கள், சில்லறை வியாபாரிகள் அவசிய தேவைக்கு வங்கிகளிலும், தனியாரிடமும் தங்க நகைக்கடன் வாங்குகிறார்கள். விவசாயிகளைப் பொருத்தமட்டில் விதைப்பு காலத்தில் இருந்து அறுவடை வரை ஒவ்வொரு பணிக்கும் நகைக்கடன்தான் வாங்குகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு தங்கத்தை ஈடாக வைத்து வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்குவது என்பது மிக எளிது. மற்ற கடன்களை வாங்குவதற்கு பல நடைமுறைகள் உண்டு. ஆனால் நகைக்கடன் வாங்க நகைகளை கொடுத்தவுடன், அதை மதிப்பீடு செய்துவிட்டு உடனடியாக கையில் கடன் கேட்கும் தொகையை ரொக்கமாக வழங்கிவிடுவார்கள். அறுவடை முடிந்து கையில் பணம் கிடைத்தவுடன் கொண்டுபோய் கடன் தொகையை கொடுத்தபிறகு, சில நிமிடங்களில் நகையை திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். சில கிராமங்களில் பெண்களிடம் உங்கள் நகை எங்கே என்று கேட்டால், பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கிறது. அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் வந்துவிடும் என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். குறு, சிறு, நடுத்தர தொழில்களை நடத்துபவர்கள் பெரிய ஆர்டர் கிடைக்கும்போது நிறைய மூலப்பொருட்கள் வாங்குவதற்கு உள்பட பல்வேறு தேவைகளுக்காக ஆபத்பாந்தவனாக நகைக்கடன்தான் உதவியாக இருக்கின்றன. சில்லறை வியாபாரிகளுக்கு கூடுதலாக சரக்கு வாங்க பணம் தேவைப்பட்டால், கடன் வாங்குவதை விட நகைக்கடன்தான் மிகவும் வசதி என்ற வகையில் அதையே வாங்கிவிட்டு, வியாபாரம் லாபகரமாக இயங்கியதும் நகையை திருப்பி விடுகிறார்கள். ஆக, விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தொழில் வளர்ச்சிக்கும், வியாபார பெருக்கத்துக்கும் அதிகம் துணை நிற்பது தங்க நகைக்கடன்தான். எனவேதான் கையில் பணம் இருக்கும்போது மற்ற சேமிப்புகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதை பெரும்பாலான குடும்பத்தினர் விரும்புகிறார்கள். பெண்களுக்கும் தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் ஆபரணம் என்று ஒரு வகையிலும், அவசர செலவுக்கு கணவனுக்கு, பிள்ளைகளுக்கு கொடுப்பதில் உறவு வலுவடைகிறது என்ற வகையிலும் தங்கம் மீது அவர்களுக்கு அதிக மோகம் ஏற்படுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிக நகைக்கடன் வழங்கப்படுகிறது. நகைக்கடன் வாங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி பொதுத்துறை வங்கிகள் வழங்கிய தங்க நகைக்கடன்களைப் பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் வங்கிகள் வழங்கி நிலுவையில் உள்ள கடன் அளவு ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 656 கோடியாகும். 2-வது இடத்தில் இருக்கும் ஆந்திராவைவிட தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் 85 சதவீதம் அளவுக்கு அதிகமாக நகைக்கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆந்திராவில் வாங்கப்பட்ட நகைக்கடன் அளவு ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 953 கோடிதான். ஆக, தமிழக பெண்களுக்கு நகை என்பது தங்களை அலங்கரிக்கும் ஆபரணம் என்பதோடு. குடும்பத்தினரின் அவசர தேவைகளுக்காக கடன் வாங்குவதற்கு உதவிக்கரமாகவும் திகழ்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/others/thalayangam/nakaikadan-vaanguvathil-mudhal-idathil-thamizhnadu




