புதுடெல்லி, உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் சீருடை வழக்கமான நீல நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணியின் அடையாளமாக விளங்கிய நீல நிற சீருடை மாற்றப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் வீரென் ரஸ்கின்ஹா உள்பட பலரும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் சீருடை நிறம் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து ஆக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச ஆக்கி போட் டிக்கான செயற்கை இழை ஆடுகளங்களின் நிலையான நிறமாக நீலம் இருக்கிறது. அதே நிறத்தில் சீருடையும் இருந்தால் வீரர்களின் தெளிவும், பார்வையும் பாதிக்கப்படுகிறது. இதனால் பயிற்சியாளர்கள், வீரர்கள் நீலத்துக்கு மாற்று நிறமாக மஞ்சள் அல்லது காவியை பரிந்துரைத்தனர். கவனமான பரிசீலனைக்கு பிறகு காவி நிறம் இறுதி செய்யப்பட்டது. தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி காவி நிறம் நமது தேசிய கொடியின் வண்ணங்களில் ஒன்றாக இருப்பதால் அதை தேர்ந்தெடுத்தோம். இந்திய ஆக்கி அணியின் சீருடை நிறம் மாற்றப்படுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. செயல்பாடு மற்றும் பிற தேவைகளுக்கு ஏற்ப இந்திய அணியின் சீருடை நிறம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியின் சீருடை மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் வெளிர் நீல நிறமாக மாற்றம் செய்யப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், 'நாங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் தான் கவனம் செலுத்துகிறோம். மற்ற விஷயங்களை (சீருடை நிற விவகாரம்) பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது அணியும், பயிற்சியாளர்களும் எடுத்த கூட்டு முடிவு. இதில் எந்த தவறும் இல்லை' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/hockey/why-was-indias-hockey-team-jersey-changed




