சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் தான் தாக்கப்பட்டது குறித்து அருணாச்சலம் கூறும் காணொளி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் ஜனநாயகத் துரோகமில்லையா? தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய்க்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக, கொலையாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத அவலம்! ஆகவே, காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலம் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/custody-death-of-remand-prisoner-in-thoothukudi-police-station-seeman-condemns



