திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின் முன்னோடி நிகழ்ச்சியான 'அங்குரார்ப்பணம்' (முளையிடுதல்) நேற்று இரவு சம்பிரதாயப்படி நடந்தது. அங்குரார்ப்பணம் என்றால் என்ன? கோவில்களில் கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் போன்ற வைபவங்களுக்கு முன்பாக முதன்முதலில் அங்குரார்ப்பணம் நடத்தப்படுவது வழக்கம். வைகானச ஆகமத்தின்படி அங்குரார்ப்பணம் என்பது யாகசாலையில் நடத்தப்படும் புனிதமான விதைகள் விதைக்கும் நிகழ்ச்சியாகும். அத்துடன் இந்த நிகழ்வு பிரம்மோற்சவத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது. இந்நிகழ்வில் 'பாலிகா' எனப்படும் மண் கலயங்களில் 9 வகையான தானியங்கள் (நவ தானியங்கள்) விதைக்கப்படுகின்றன. மனித குலத்தின் நலனுக்காகவும், தெய்வீக அருளை பெறுவதற்காகவும் நடத்தப்படும் நிகழ்ச்சியை வைகானச ஆகமம் 'பீஜாவாபனம் (விதை விதைத்தல்)’ என்றும் குறிப்பிடுகிறது. தானியங்கள் முளைத்து வளர்வது பிரம்மோற்சவ விழா தடையின்றியும் வெற்றிகரமாகவும் நடப்பதற்கான ஒரு மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வாழ்வு, வளம், வளர்ச்சி மற்றும் செழிப்பை விதைகள் குறிக்கின்றன. அவை முளைப்பது, விழாவின் சிறப்பான வெற்றியையும் பக்தர்களின் நலனையும் குறியீட்டு ரீதியாக உணர்த்துகிறது. பாரம்பரிய முறைப்படி சந்திரன் (திங்கள்) 'சஸ்ய காரகன்' (தாவர வளர்ச்சியைத் தீர்மானிப்பவர் மற்றும் கட்டுப்படுத்துபவர்) என்றும் கருதப்படுவதால், அங்குரார்ப்பணம் பொதுவாக இரவில் நடத்தப்படுகிறது. முக்கிய விழாவுக்கு 9 நாட்களுக்கு முன்பு அங்குரார்ப்பணம் நடத்தப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சூழ்நிலையைப் பொறுத்து விழாவுக்கு ஏழு, ஐந்து, மூன்று அல்லது குறைந்தது ஒரு நாளுக்கு முன்பும் அங்குரார்ப்பணத்தை நடத்தப்படலாம். அங்குரார்ப்பணத்தின் போது விதைக்கப்பட்ட நவ தானியங்கள் வெறும் பயிர்கள் மட்டுமல்ல, அவை 9 கோள்களை (நவக்கிரகங்களை) குறிப்பிடுகின்றன. கோதுமை சூரியனையும், அரிசி சந்திரனையும், துவரை செவ்வாயையும், பாசிப்பயறு புதனையும், கொண்டைக்கடலை வியாழனையும், தட்டைப்பயறு வெள்ளியையும், எள் சனியையும், உளுந்து ராகுவையும், கொள்ளு கேதுவையும் குறிப்பதாக, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/why-ankurarpanam-performed-beginning-of-brahmotsavam-festival



