சென்னை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும். செவிலியர்கள் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். 204 அரசாணை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21-ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது. இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது. பணியிடங்களை குறைப்பது நியாயமல்ல தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல. தொகுப்பூதிய செவிலியர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500-க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதி 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts




