பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, சர்வதேசப் போட்டிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, நம் மிதாலி ராஜ் உள்ளிட்ட பல சர்வதேச ஸ்டார்களை விஞ்சி, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். 30 வயதில் ஸ்மிருதி செய்திருக்கும் இந்தச் சாதனையை ஆண்கள் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டால் அது கோலி, சச்சின், பிராட்மேனையே தாண்டிய ஒன்று எனச் சொல்லலாம். இது வெறும் ‘நம்பர் வொண்டர்’ அல்ல; தொடர்ச்சியான உழைப்பு, உறுதியான தன்னம்பிக்கையின் வெற்றி. இந்தச் சாதனையை அடைவதற்கு முன் ஸ்மிருதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரும் புயல் வீசியது. ஸ்மிருதியின் நீண்டகால காதலருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஏகப்பட்ட வதந்திகள் எழுந்தன. ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எங்கும் இது விவாதிக்கப்பட்டது. ஸ்மிருதிக்குப் பல அழுத்தங்கள் ஏற்பட்டன. ஈறுகள் தெரிய சிரிக்கும் அந்தச் சிரிப்பு காணாமல் போனது. ஆனால், எல்லாம் சில நாள்கள்தான். “என் கவனம் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே இருக்கும்” என்று மீண்டும் மைதானத்துக்கு வந்தார். தனிப்பட்ட வலிகளைத் தாண்டி, தொடர்ந்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடி, இறுதியில் இந்த உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஸ்மிருதியின் பயணம் அனைத்து பெண்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியை அளிக்கிறது. பெண்கள் தங்கள் கனவுகளை, தொழிலை, சுயமரியாதையை எப்போதும் முன்னிலைப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பின்னடைவுகள் தற்காலிகமானவை; சாதனைகள் நிரந்தரமானவை. ஸ்மிருதியின் வெற்றி இதைத்தான் உரக்கச் சொல்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள், உறவுச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள் - இவை எதுவும் ஒரு பெண்ணின் தொழில்முறை இலக்கைத் தடுக்க அனுமதிக்கக் கூடாது. சோதனைகள் வரும். ஆனால், அவற்றைத் தாண்டி முன்னேறுவதே உண்மையான வலிமை. ஸ்மிருதி மந்தனா அதை நிரூபித்துள்ளார். பெண்களுக்கான தடைகளுக்கு இங்கு குறையே இல்லை. குடும்பம், சமூகம், பணியிடம் என எல்லா இடங்களிலும் அவர்கள் அவற்றைத் தாண்டித்தான் நடக்க வேண்டியுள்ளது, ஓட வேண்டியுள்ளது. ஆனால், சிலர் இதில் கரை சேர்ந்தாலும், பலர் களைத்து, கரைந்துவிடுகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். ஸ்மிருதியின் பிரத்யேக சிரிப்பு எல்லா பெண்களிடமும் உண்டு. அதைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் சில சமயம் நாம் தவறவிடுகிறோம். இலக்கை அடைய முடியாமல் போனதற்குக் காரணங்களைத் தேடாமல், அவற்றை கடக்கும் வலிமை உள்ளவர்களாகப் பெண்கள் மாற வேண்டும். அதுதான் வெற்றிக்கான ஒரே ஃபார்முலா. உரிமையுடன், ஸ்ரீ ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/editorial/namakkulle-editorial-page-september-22-2026




