சென்னை சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர் பொருளாதாரத்தை (Circular Water Economy) நடைமுறைப்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 90 மில்லியன் லிட்டர் இந்த இரண்டு நிலையங்களும் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து வருகின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான நீரை வழங்குவதாகும். இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் நீண்டகால நீர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், நிலத்தடி நீர்ப்பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானத்துறை, ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) மற்றும் கான்கிரீட் பிளாக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீர் பாதுகாப்பு இத்திட்டம் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நன்னீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதோடு, கழிவுநீர் வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மற்றும் இயற்கை நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதுடன், சென்னை மாநகரின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நம்பகமான மாற்றுநீர் ஆதாரம் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, குடிநீர் தேவைகளுக்காக கூடுதல் நீர் கிடைப்பதால் பொதுமக்களின் நீர் பாதுகாப்பும் மேம்படுகிறது. கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் செயல்படும் TTRO நிலையங்களின் மூலம் கழிவுநீரை மதிப்புமிக்க வளமாக மாற்றி, சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதோடு, நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடைவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. கொட்டும் மழையில் இந்த ஆய்வின்போது, அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ. பர்வீஸ், தலைமை பொறியாளர்கள் ஏ.இராதாகிருஷ்ணன், கு.பா.வைதேகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, கோயம்பேடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் முதல்-அமைச்சர் விஜய்யை காண்பதற்காக பாலத்திற்கு கீழேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் காத்திருந்தனர். இதனால், கொட்டும் மழையிலும் காத்திருந்த மக்களை காண்பதற்காக, காரை விட்டு கீழே இறங்கி குடையுடன் வந்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களை நோக்கி கையசைத்து விட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-waiting-in-heavy-rain-cm-vijay-waves-with-umbrella-after-inspection




