சென்னை, அடுக்கடுக்கான வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமார் இருவரும் தற்போது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை செந்தில்பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்துதான் அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலையில் இந்த ஓட்டலுக்கும், லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில், 3 அதிகாரிகள் சென்றனர். அங்கு செந்தில்பாலாஜி தங்கியிருந்த அறையில், செந்தில்பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்தினார்கள். பிற்பகலில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது, செந்தில்பாலாஜியிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணைக்கு, செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். முன்ஜாமின் மனு தள்ளுபடி இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு இந்த நிலையில், முன் ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனாலேயே சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-senthil-balaji-appeals-in-supreme-court-seeking-anticipatory-bail




