சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக்கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ? என்ற அச்சமும், பதட்டமும் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேகதாது அணையை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலையளிக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது. காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாவதைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆய்வு ஆனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பெரிய அளவில் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், கர்நாடக அரசோ அடுக்கடுக்காக இலக்குகளை வைத்துக் கொண்டு அவற்றை அடைவதற்கான பயணத்தை விரைவுபடுத்தி வருகிறது. மேகதாது அணைக்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்திய கர்நாடக முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார், அடுத்தக்கட்டமாக அணை கட்டப்படவுள்ள வனப்பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத அளவில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தொடங்கி, காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். ஜூலை 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெற்ற பயணத்தின் போது பிலிகுண்டுலு, ஓகனேக்கல், பென்னாகரம், தருமபுரி, சேலம், மேட்டூர், பவானி, ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, கல்லணை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட நகரங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து பேசினேன். அவர்களின் ஒற்றைக் கோரிக்கை மேகதாது அணையை தடுக்க வேண்டும் என்பது தான். தீர்ப்புகளையும் மதிக்காமல் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளிடம் மேகதாது அணை குறித்த அச்சம் இமயமலையின் அளவை விட அதிகமாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் கூறினாலும் அதை நம்ப நமது விவசாயிகள் தயாராக இல்லை. 1970ஆம் ஆண்டுகளில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே சட்ட விரோதமாக அணைகளை கட்டியது முதல், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடகம் செய்த துரோகங்களை அவர்கள் மறக்கவில்லை. 1970களில் ஏமாந்ததைப் போல தமிழகம் மீண்டும் ஏமாந்து விடக் கூடாது என்பது தான் அவர்களின் கோரிக்கை. அதே நேரத்தில் மேகதாது அணை சிக்கலில் தமிழ்நாடு அரசின் தற்போதைய செயல்பாடுகள் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கிஞ்சிற்றும் நம்பிக்கை அளிக்கவில்லை என்பதை அவர்களிடம் நடத்திய உரையாடல்களில் இருந்து நான் அறிந்து கொண்டேன். உழவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்-அமைச்சர் விஜய்-க்கு இருந்தாலும், அவர் தவறாக வழிநடத்தப்படுவதாகவே விவசாயிகள் கருதுகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் அதிலும் குறிப்பாக, மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு சற்றும் தொடர்பில்லாத வகையில், மேகதாது சிக்கலுக்கு தீர்வுகாண புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வெண்டும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இது கர்நாடகத்திற்கு சாதகமாகவே அமையும் என அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சம் நியாயமானது. போர்க்களத்தில் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். துரோகம், சதி, நயவஞ்சகம் உள்ளிட்ட அறத்திற்கு எதிரான அனைத்தையும் பயன்படுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபடும் போது, அதை முறியடிக்க சட்ட ஆயுதங்களையும், அரசியல் ஆயுதங்களையும் எடுப்பதற்கு பதிலாக, நடுவர் மன்றம் அமைக்கக்கோருவது, எட்டு திசைகளில் இருந்தும் ஆயுதங்கள் ஏவப்படும் களத்தில் நிராயுதபாணியாக நிற்பதற்கு ஒப்பானது என்பதே உழவர்களின் கருத்தாக உள்ளது. இந்த உத்தியை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று காவிரி டெல்டா உழவர்கள் வலியுறுத்துகின்றனர். அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் அதுமட்டுமின்றி, புதிய அரசு பதவியேற்ற பிறகு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பயனற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதை தவிர வேறு எதையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்த அலட்சியம் காவிரி பாசன மாவட்டங்களின் உரிமைகளைக் காக்க உதவாது. மேகதாது அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறதோ, அதை விட பல மடங்கு தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். அதன் மூலம் மேகதாது அணை தொடர்பாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை அரசு போக்க வேண்டும். மேலும் மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-issue-government-should-convene-an-all-party-meeting-anbumani-insists




