விநாயகரை ஆனைமுகத்தானாவே பெரும்பாலும் வணங்குகிறோம். சில தலங்களில் விநாயகர் மனித ரூபத்திலும் அருள்கிறார். ஆனால் அவரே லிங்க ரூபனாக அருளும் தலம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது தீவனூர். திருவண்ணாமலைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ளதால் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளது. இந்தத் தலத்தில்தான் விநாயகர் லிங்கரூபனாக அருள்கிறார். விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் இந்த அற்புத விநாயகருக்கு, 'பொய்யாமொழி பிள்ளையார்' என்றும் பெயர் உண்டு. இவரை, 'நெல் குத்தித் தந்த விநாயகர்' என்றும் சொல்கிறார்கள். தீவனூர் லிங்கவடிவ விநாயகர் முன்னொரு காலத்தில் முருகப்பன் என்னும் வணிகர் 100 பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில்காரர்கள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், ‘‘மூட்டையில் உள்ளது அத்தனையும் உளுந்து; என்னிடம் மிளகு இல்லையே’’ என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஊருக்குச் சென்றதும் மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாக மாறியதாம். அந்த மிளகு முழுமையையும் விற்பனை செய்து அந்தப் பணத்தில் வணிகர் ஆலமரத்தடி விநாயகருக்குக் கோயில் எழுப்பி, பொய்யாமொழி விநாயகர் என்ற பதிகமும் பாடினார் என்கிறது தலவரலாறு. இந்தக் கோயிலுக்குப் பின்புறக் குளக்கரையை ஒட்டி மூன்று ஆலமரங்கள் உள்ளன. இந்த மூன்றும் மும்மூர்த்திகளின் வடிவாகக் கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். கணநாதர் இங்கு லிங்க ரூபமாய் இருப்பதால் 'கணபதி லிங்கம்' எனப்படுகிறார். நந்தி அவருக்கு முன்பாக அமர்ந்துள்ளது. மூஞ்சூறும் யானையும் வாகனமாய் இருக்கின்றன. சிறிய லிங்க வடிவில் விநாயகர் இருந்தாலும் பாலபிஷேகம் செய்யும்போது எழும் காட்சியில் தும்பிக்கையோடு பிள்ளையார் தரிசனம் தருவது இத்தலத்தின் அற்புதம். இந்தக் கோயிலின் பிராகாரத்தை வலம் வந்தால் விதவிதமான விநாயகர்களின் தரிசனம் காணலாம். தனிச் சந்நிதியில் ஜோதிர்லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதி, நாகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி ஆகியவையும் உண்டு. தீவனூர் லிங்கவடிவ விநாயகர் இந்தத் தலம் திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் சிறப்புற்று விளங்குகிறது. குடும்பம் குடும்பமாக இங்கு வந்து பொங்கலிட்டுப் படையலிட்டு வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல பக்தர்களிடம் உள்ளது. புது வீடு கட்டியவர்கள், புதிய வாகனம் வாங்கியவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்வது இங்கு வழக்கம். சுற்றுவட்டார மாவட்டங்களில் யாருக்குத் திருமணம் நடைபெற்றாலும் இங்கு வந்து புதுமணத் தம்பதிகள் பிள்ளையாரின் ஆசி வாங்கிச் செல்கிறார்கள். எப்போதும் பல அதிசயங்களையும் அற்புத அனுபவங்களையும் அளிக்கும் இந்தப் பிள்ளையார் தமிழகத்தின் பிரசித்திபெற்ற கணபதிகளில் ஒருவர் எனலாம். மரக்காணம் சூணாம்பேட்டை ஜமீனுக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு வந்து ஒரு பக்தர் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று ஏளனம் பேசி அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். அவ்வாறு கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது. தீவனூர் லிங்கவடிவ விநாயகர் கோயில் இங்குள்ள நவகிரங்களை வணங்கி அந்த மேடையில் கைகளை அழுத்தி வைத்து வணங்குவது வழக்கம். எந்த அழுத்தமும் இன்றித் தானாகவே கைகள் கூடிவிட்டால் எண்ணியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. விநாயக சதுர்த்தி விழா இங்கே சீரும் சிறப்புமாக நடைபெறும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை தீவனூர் சென்று லிங்கவடிவ விநாயகரை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/spiritual/temples/deevanur-sri-arulmigu-poyyamozhi-vinayagar-temple




