சென்னை, சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த விமான நிலையத்திற்கான உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி கடிதம் இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி கே. ராம் மோகன் நாயுடுவுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: விமானப் போக்குவரத்து மந்திரி கே. ராம்மோகன் நாயுடுவுக்கு, வணக்கம்! பொருள்: சேலத்தில் இருந்து கொச்சி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை தொடர்வதை உறுதி செய்யும் வகையில் உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை விடுப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். சில மாதங்களில் சேவைகள் நிறுத்தம் சேலம் கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் 33 ஆண்டுகளுக்கு முன் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்றாலும், அங்கிருந்து வணிகரீதியிலான விமானப்போக்குவரத்து சேவை அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அதே ஆண்டில் தொடங்கப்பட்டாலும் கூட அது நீடிக்கவில்லை. அதன்பிறகும் பல முறை விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், அவை போதிய ஆதரவின்றி அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படுவதே வாடிக்கையானது. எளிய மக்களும் விமானத்தில் பறப்பதை சாத்தியமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட உடான் ((UDAN-Ude Desh ka Aam Naagrik) ) திட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் சேலம் - சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டாலும் 2021-ஆம் ஆண்டில் மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த உடான் 5.2 திட்டத்தின் படி 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூர், கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவை தவிர உடான் திட்டத்தில் இல்லாமல் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இதுவே முதல் முறை சேலத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்தில் 11 முறையும், சென்னை மற்றும் கொச்சிக்கு வாரத்தில் 7 முறையும், ஐதராபாத்துக்கு வாரத்தில் 4 முறையும் தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேலம் விமான நிலைய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் உடான் 5.2 திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்ட சலுகைகள் தான். சேலம் போன்ற நகரங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் போது தொடக்க நிலையிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. காலப்போக்கில் தான் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். அதுவரை தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்காக நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் தான் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன. சேவையை நிறுத்த முடிவு உடான் 5.2 திட்டம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான சேவையை நிறுத்த தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. அந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு மட்டுமே விமான சேவை இயக்கப்படும். அது சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து விமானங்களை இயக்குவதற்கான உடான் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஆனால், அந்தத் திட்டத்தின் காலவரையறை தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை தடுக்கிறது. உடான் திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. ஒரு இரண்டாம் நிலை நகரத்திலிருந்து தொடங்கப்படும் விமான சேவை தற்சார்பு நிலையை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அவ்வாறு இருக்கும் போது 3 ஆண்டுக்கு மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. சேலத்திலிருந்து கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை தொடங்கப்பட்ட போது ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இப்போது 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது 60% முதல் 70% என்ற அளவுக்கு உயரும் போது விமான நிறுவனங்கள் அரசின் நிதி உதவியின்றி விமானங்களை இயக்க முடியும். சேலம் - சென்னை சேவை அப்படித் தான் நடைபெற்று வருகிறது. மேலும் நீட்டிக்க வேண்டும் உடான் 5.2 சேவை நிறுத்தப்படுவதால் சேலம் விமான நிலையம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களின் சிறிய விமான நிலையங்களும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் கல்புர்கி, சிவமோகா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உடான் திட்ட சலுகைகள் அக்டோபர் மாதம் கைவிடப்பட இருப்பதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள உடான் 5.2 திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதன்பின் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டால், அதற்காக ஆகும் செலவில் பாதியை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டிலும் சேலத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் தொடர்வதை உறுதி செய்வதற்காக உடான் 5.2 திட்டத்தை 2028-ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். கர்நாடக அரசு முன்வைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், 2028-ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் உதவியுடன் உடான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்தும் ஆராய வேண்டும்; சேலம் நகரிலிருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகளை தொடங்குவதற்கு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-writes-to-the-civil-aviation-minister-regarding-salem-airport-services




