பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின்(IISc) பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த விழாவில் அவர் பேசியதாவது;- “இந்திய அறிவியல் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்ற மாணவர்களாகிய நீங்கள், உங்கள் சேவைகளை இந்த சமூகத்திற்கு திருப்பி கொடுங்கள், சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யுங்கள், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். வேலை தேடிப் போராடிய முந்தைய தலைமுறையினரைப் போல் இல்லாமல், இன்றைய பட்டதாரிகளுக்குப் பல சிறந்த வாய்ப்புகள் உள்ளன. நாட்டிற்குப் பங்களிக்க உங்களுக்கு இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு நமது நாடு வறுமை நிலையில் இருந்து உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. அதே சமயம் சுகாதாரம், விவசாயம், மின்மயமாக்கல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 'விக்சித் பாரத் 2047' (வளர்ந்த இந்தியா 2047) குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ளார். சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு முன்பே நம் நாடு ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், மாணவர்கள் எப்போதும் வாசிப்பு பழக்கத்தை தொடர வேண்டும். கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, நேர்மை, குழுப்பணி மற்றும் தன்னம்பிக்கை ஆகிய பண்புகளும் மிக முக்கியமானவை என்பதால், மாணவர்கள் கடினமாக உழைப்போடு இப்பண்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இஸ்ரோவின் சாதனைகள் அனைத்தும் குழுப்பணியால் மட்டுமே சாத்தியமானது. விண்வெளி ஆய்வில் இந்தியா நீண்ட தூரம் முன்னேறி வந்துள்ளது. 105 ராக்கெட் திட்டங்கள், 135 செயற்கைக்கோள் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் மிகச் சிறந்த கேமராவை இந்தியா கொண்டிருக்கிறது. நிலவின் மிகச் சிறந்த புகைப்படங்கள் இந்தியாவுக்கே சொந்தம். சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஒரே நாடு இந்தியாதான். சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1962-ல் தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கிய ஒரு நாடு, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையும் பயணத்தை தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக மேற்கொண்டது. வேறு எந்த நாடும் இத்தகைய சாதனையைப் படைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தின்படி, 2035-ஆம் ஆண்டிற்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கும், 2040-ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஒரு இந்தியரைத் தரையிறக்குவதற்கும் இந்தியா பணியாற்றி வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/give-back-to-society-transform-india-into-a-developed-nation-isro-chairman-advises-students-at-the-convocation-ceremony




