பங்கிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பிரசாந்த் கிஷோர் களத்தைத் தனக்கு சாதகமாக மாற்றி வெற்றிக்கனியைப் பறித்திருப்பது அரசியல் வட்டாரங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தலைநகர் டெல்லியை உலுக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நாடு முழுவதும் 'ஜென் சி' என்று சொல்லப்படும் 1997-ல் இருந்து 2012-க்குள் பிறந்த இளைஞர்களை தட்டி எழுப்பிவிட்டது. நாடு முழுவதும் அந்த போராட்டத்தின் அனல் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. அதற்கான தொடக்கப்புள்ளி 3 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் வைக்கப்பட்டது. 'ஜென் சி'யைச் சேர்ந்தவர்கள் யார் வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக முடிவெடுப்பதில் மிகவும் தீர்க்கமானவர்கள். அவர்களுக்குரிய பெரிய பலம் என்னவென்றால் தாங்கள் ஓட்டுப்போடும் சின்னத்தில் தங்கள் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள்,நண்பர்கள் என்று பெரிய பட்டாளத்தையும் அதே சின்னத்தில் மூளைச் சலவை செய்து ஓட்டுப்போட வைக்கும் பிரசார பீரங்கியாக செயல்படுகிறார்கள். பீகாரில் பங்கிப்பூர், மத்தியபிரதேசத்தில் தாட்டியா. குஜராத்தில் மஞ்சள்பூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்கள் நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தாலும், பீகாரில் நடந்த இடைத்தேர்தல் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனெனில் பங்கிப்பூர் தொகுதியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 31 ஆண்டுகளாக பா.ஜனதா அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. அந்த தொகுதியில் ஜன் சூரஜ் கட்சியின் வேட்பாளராக பிரசாந்த் கிஷோர் களம் கண்டார். இவர் தேர்தல் வியூக வகுப்பாளராக குஜராத்தில் 2012-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கும், 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜனதாவுக்காக பணியாற்றி வெற்றி பெறவைத்ததால் நாடு முழுவதும் பிரபலமானார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி, தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகளின் வெற்றிகளுக்காக பணியாற்றியவர். 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்' என்ற வரிகளுக்கேற்ப பீகாரில் கடந்த 2025-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இப்போது மீண்டும் 8 மாதங்களுக்குள் போட்டியிட்டு அங்கு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த தொகுதி உருவானது 2010-ம் ஆண்டுதான் என்றாலும், அதற்கு முன்பு இது பாட்னா மேற்கு என இருந்தது. 2006 முதல் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜனதா தேசிய தலைவர் நிதின் நபின்தான் இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெறுவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததன் விளைவாகத்தான் பங்கிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பிரசாந்த் கிஷோர் களத்தைத் தனக்கு சாதகமாக மாற்றி வெற்றிக்கனியைப் பறித்திருப்பது அரசியல் வட்டாரங்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்கு முழுக்க, முழுக்க 'ஜென் சி'தான் காரணம் என்பதற்கு ஆதாரம், அந்த தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு 'ஜென் சி' வாக்காளர்கள்தான். குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதியைப் பா.ஜனதா மீண்டும் கைப்பற்றினாலும், கடந்த முறை பெற்றதைவிட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தன் வெற்றியைத் தக்க வைத்திருக்கிறது. மொத்தத்தில் பா.ஜனதாவுக்கு 'ஜென் சி'யால் சற்று பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இதை ஒரு இடைத்தேர்தல் தோல்வியாக மட்டுமே கருதமுடியாது. ஒட்டுமொத்த 'ஜென் சி'யின் எழுச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/others/thalayangam/a-stronghold-for-30-years-crumbled-in-30-days




