மும்பை, 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் மும்பையின் பணக்கார ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை, ரூ.703 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணக்கார விநாயகர் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலாகக் கருதப்படும் கிங்ஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி. சேவா மண்டல், தனது 72-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாகக் கொண்டாட தயாராகி வருகிறது. இந்த விழாவின் போது, இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் ‘மகா கணபதி’ சிலைக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளன. ரூ.703 கோடிக்கு காப்பீடு கடந்த ஆண்டு இந்த மண்டல் சார்பில் ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் விதமாக காப்பீட்டுத் தொகை ரூ.703 கோடியே 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை மற்றும் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களுக்கு இந்தக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிருக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டலின் செய்தித் தொடர்பாளர் அமித் பை கூறுகையில், “பொறுப்புள்ள ஒரு அமைப்பாக, விழாவிற்கு வரும் ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்புக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது எங்கள் கடமையாகும். அதனால்தான் இந்த மெகா காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துள்ளோம்” என்றார். டிஜிட்டல் ரசீதுகள் முற்றிலும் இயற்கை வழிப் பொருட்களால் உருவாக்கப்படும் இந்த விநாயகரின் முதல் தோற்றம், வருகிற 12-ந்தேதி இரவு 8 மணிக்கு ‘விராட் தர்ஷன்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பக்தர்களுக்கு முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த 5 நாள் விழாவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும், மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரசாதமும் வழங்கப்பட உள்ளன. மேலும், காகிதப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் பாரம்பரிய காகித ரசீதுகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/insured-for-703-crore-vinayagar-dazzles-in-66-kg-of-gold-and-335-kg-of-silver




