சென்னை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran




