சென்னை, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சி.ஜனார்த்தனன் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை இணை ஆணையர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்கள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன் ஆஜராகி வாதிட்டார். அறநிலையத் துறை ஆணையர் சார்பில், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தியுள்ளதால், நிலத்தை அவர்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓராண்டுக்கு முன் தெரிவித்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அன்னதான கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் போவதாக தெரிவித்த அறநிலையத்துறை, தற்போது ஆக்கிரமிப்பாளர்களை தொடர அனுமதிக்க இருப்பதாகக் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 25 லட்சத்து 29 ஆயிரத்து 907 ரூபாய் வாடகை பாக்கி உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என வெறும் 7 சதவீத தொகையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மீண்டும் வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 7-ம் தேதிக்குள் அகற்றி, 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், புராதன சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலுக்குள், அன்னதான கூடம் கட்டுவது ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachment-of-temple-land-high-court-reprimands-hindu-religious-and-charitable-endowments-department




