சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கழிவுகள் தரம் பிரிப்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ’பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் படி, கழிவுகளை பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்: · மக்கும் கழிவுகள் (பச்சை நிறக் குப்பைத்தொட்டி): உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகள். · மக்காத கழிவுகள் (நீல நிறக் குப்பைத்தொட்டி): காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள். · சுகாதாரக் கழிவுகள் (சிவப்பு நிறக் குப்பை தொட்டி): பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சுற்றி தனியாக வழங்க வேண்டும். · வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் (கருப்பு நிறக் குப்பைத்தொட்டி): பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரக் கழிவுகளை தனியாக ஒப்படைக்க வேண்டும். சுகாதாரம் மேம்படும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் (Compartments) வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்தல் மற்றும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தகவல்–கல்வி–தொடர்பு (IEC) நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சென்னையை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தினந்தோறும் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிக்கத் தவறுதல் அல்லது திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிமுறைகளை மீறுதல் ஆகியவை சட்டப்படியான அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. "திடக்கழிவுகளை உருவாககும் இடத்திலேயே தரம் பிரிப்போம்! தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான சென்னையை உருவாக்குவோம்!" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-appeals-to-the-public-to-segregate-and-dispose-of-solid-waste




