தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். கரிசல் மண்ணின் யதார்த்த வாழ்க்கையைத் தன் எழுத்துகளால் செதுக்கிய அவரது மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர் பூமணி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் 1947-ம் ஆண்டு மே 12 அன்று பூலித்துரை - தேனம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பூலித்துரை மாணிக்கவாசகம் (பூ. மாணிக்கவாசகம்) ஆகும். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றிய இவர், துணைப் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். அதன் பின்னர் முழுநேரமாகத் தன்னை இலக்கியப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். "அசுரன்ல இதை சேர்த்திருக்கலாம்!" - ‘வெக்கை’ பூமணி 1971-ல் பூமணியின் முதல் சிறுகதையான ‘அறுப்பு’, தாமரை இதழில் வெளியானது. கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், உழைப்பாளர்களின் உழைப்பு, சாதி அமைப்பின் யதார்த்தங்கள் ஆகியவற்றை எவ்விதப் புனைவும் இன்றி மிக நுட்பமாகத் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி. வெக்கை, பிறகு, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை போன்ற நாவல்களும், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்ற சிறுகதை தொகுப்பும் இவரின் இலக்கியப் பங்களிப்பாகும். அசுரன் எழுத்தோடு நின்றுவிடாமல் திரைத்துறையிலும் தடம் பதித்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக (NFDC) இவர் இயக்கிய 'கருவேலம்பூக்கள்' திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது. அதேபோல், இவருடைய புகழ்பெற்ற நாவலான 'வெக்கை' இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் பூமணியின் எழுத்துகள் புதிய தலைமுறை வாசகர்களிடமும் பரவலாகச் சென்றடைந்தன. தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பேராற்றல் மிக்க பணிகளுக்காக பூமணிக்குப் பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. குறிப்பாக அஞ்ஞாடி புதினத்திற்காக 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, 2011-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது, இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது மற்றும் விளக்கு விருது உள்ளிட்டவை கவனிக்கத்தக்கவை. மறைந்த எழுத்தாளர் பூமணியின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/literature/renowned-writer-and-sahitya-akademi-award-winner-poomani-has-passed-away



