இந்திய நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருந்தாலும், நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி பன்முகத்தன்மை ஆய்வு நிறுவனமான 'Avtar Career Creators Limited' மற்றும் 'Seramount' இணைந்து நடத்தியுள்ள 2026-ம் ஆண்டுக்கான 'Best Companies for Women in India' (BCWI) ஆய்வறிக்கை இந்தத் தகவலைச் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்களின் பணியிடப் பிரதிநிதித்துவம், தொழில் வளர்ச்சி, பணியிடத்தில் தங்குமிடம், மற்றும் பணியிட நல்வாழ்வு (workplace wellness) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரிவைச் சந்திக்கும் உயர் நிர்வாகப் பதவிப் பிரதிநிதித்துவம் இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 34.6 சதவிகிதமாக உள்ள போதிலும், உயர் நிர்வாகப் பதவிகளில் (Corporate Executive) அவர்களின் பங்கு இந்த ஆண்டு 16.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே பதவிகளில் பெண்களின் பங்கு 20 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான பணிச்சூழல், பிரதிநிதித்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் 387 நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றுள் 125 நிறுவனங்கள் 'Best Companies for Women in India' பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் பெண்களின் ஒட்டுமொத்தப் பங்கு 34.6% ஆகவும், அவற்றுள் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்களில் இந்தப் பங்கு 42.8% ஆகவும் பதிவாகியுள்ளது. தலைமையகங்களின் செயல்பாடும் மாறுபட்ட நிலவரமும் நிறுவனங்களின் தலைமையகங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியத் தலைமையகங்களைக் கொண்ட நிறுவனங்களில் பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவம் 31.4% ஆகவும், உயர் நிர்வாகப் பதவிகளில் 14.2% ஆகவும் உள்ளது. அதேசமயம், அமெரிக்கத் தலைமையக நிறுவனங்களில் பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவம் 41.1% ஆகவும், உயர் பதவிகளில் 18% ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பெண்களின் பங்கு 39.2% ஆகவும், உயர் நிர்வாகத்தில் 20% ஆகவும் உள்ளது. வெளிநாட்டுத் தலைமையகம் கொண்ட நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியத் தலைமையகங்களைக் கொண்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்கள் அங்கம் வகிக்கும் விகிதம் சற்றுப் பின் தங்கியே இருப்பது தெரியவந்துள்ளது. பெண்கள் பணியை விட்டு விலகக் காரணங்கள் என்ன? நிறுவனங்களை விட்டுப் பெண்கள் வெளியேறுவதற்குச் சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிப் பாதைகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 89 சதவிகிதப் பெண்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான சவால்களை 30 சதவிகித பெண்களும், குழந்தைப் பராமரிப்புச் சுமையை 28 சதவிகித பெண்களும் தங்களது பணியிடச் சவால்களாகப் பட்டியலிட்டுள்ளனர். "உள்ளடக்கல் என்பது வெறும் எண்ணிக்கையல்ல!"- அவதார் குழுமத் தலைவர் கருத்து இந்த நிலவரம் குறித்துப் பேசிய அவ்தார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், ``நிறுவனங்களில் உள்ளடக்கக் கொள்கை (Inclusion) என்பது பெண்கள் அலுவலகத்தில் பணியாளர்களாக இருப்பதை மட்டும் உறுதி செய்வதோடு நின்றுவிடக் கூடாது; மாறாக அவர்கள் நிறுவனத்தின் முக்கிய முடிவெடுக்கும் இடங்களிலும் செல்வாக்கு செலுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்" என்றார். இந்த ஆண்டு உயர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பது, உள்ளடக்கல் சார்ந்த முன்னேற்றம் எப்போதுமே ஒரே நேர்கோட்டில் இருக்காது என்பதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். லாபமும் வளர்ச்சியும் தரும் உள்ளடக்கல் சவால்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நேர்மறையான மாற்றங்களும் நிகழ்ந்துவருகின்றன. நிறுவனங்களில் பின்பற்றப்படும் முறையான உள்ளடக்கல் நடைமுறைகள் (Inclusive Practices) காரணமாகத் தங்களின் செயல்பாட்டு லாபம் (Operating profit) அதிகரித்துள்ளதாகக் கூறும் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 70 சதவிகிதத்தில் இருந்து இந்த ஆண்டு 79.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவத்தை வெறும் எண்ணிக்கையில் அதிகரிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிறுவனத்தின் ஒட்டுமொத்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் உயர் நிலைகளையும் அவர்கள் அடைவதை உறுதி செய்வதே கார்ப்பரேட் நிறுவனங்களின் அடுத்தகட்டச் சவாலாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/gender/empowerment/womens-representation-drops-in-india-incs-top-roles-shocking-data-from-avtar-study




