பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு மந்திரிகளின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைக்கின்றனர். அழகும், அமைதியும், ஆச்சரியமும் கொட்டிக்கிடக்கும் லட்சத்தீவை பற்றியும், அங்கு என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளன என்பது பற்றியும், லட்சத்தீவை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் இங்கே காண்போம். யூனியன் பிரதேசம் லட்சத்தீவு இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இது அரபிக் கடலில் கேரளா அருகே உள்ளது. தோராயமாக 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மிகச்சிறிய பிரதேசமாகும். மாலத்தீவுடன் ஒப்பிடும்போது, லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 10 மடங்கு குறைவு. கவராத்தி இதன் தலைநகராக விளங்குகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மலையாள மொழி பேசுகிறவர்களாக உள்ளனர். 1956-ம் ஆண்டு லட்சத்தீவு யூனியன் பிரதேசமாக மாறியது. லக்கடிவ், மினிகாய் மற்றும் அமிண்டிவி தீவுகள் என்று அழைக்கப்பட்ட இந்த தீவுக்கு, 1973-ம் ஆண்டு `லட்சத்தீவு’ என்று பெயரிடப்பட்டது. மலையாளம் மற்றும் சமஸ்கிருத மொழியில் லட்சத்தீவு என்ற பெயருக்கு 'நூறாயிரம் தீவுகள்' என்று பொருள். 36 சிறிய தீவுகளைக் கொண்ட லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரமாகும். சிறிய அளவில் இருந்தாலும், லட்சத்தீவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் பரவலாக வாழ்கிறார்கள். மேலும் இங்குள்ள மொத்த தீவுகளில் பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அனுமதி சான்றிதழ்: இங்குள்ள அழகிய கடற்கரைகள் மற்றும் வசீகர இயற்கை அழகு காரணமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை லட்சத்தீவில் செலவிட விரும்புகின்றனர். லட்சத்தீவுக்கு செல்ல சில கட்டுப்பாடுகளும் உள்ளன. நாய் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கும், பிளாஸ்டிக் உபயோகிப்பதற்கும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பூர்வீகமாக வசிப்பவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தவிர, மற்ற அனைவருக்கும் லட்சத்தீவிற்கு செல்ல அனுமதி தேவை. அதற்கான அனுமதியை கொச்சியில் உள்ள லட்சத்தீவு அலவலகத்தில் பெற வேண்டும். அதை ஆன்லைனில் வாயிலாகவோ அல்லது நேரில் சென்றோ பெறலாம். அனுமதியை பெற விமான அல்லது கப்பல் பயணச்சீட்டு, தங்கும் விடுதியின் முன்பதிவு தகவல்கள், தெளிவான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்லுபடியாகும் அடையாளச் சான்றின் நகல், காணபோகும் தீவுகள் ஆகிய தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே எந்த தீவுக்கு செல்ல வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பின்னர் கிடைத்த அனுமதி சான்றிதழை லட்சத்தீவு அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது இந்திய குடிமக்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும். அனுமதி சான்றிதழ் பொதுவாக 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் பங்காரம் தீவு: பங்காரம் தீவு லட்சத்தீவின் சொர்க்கம் என்றே கூறலாம். இந்த தீவில் பறவைகள் சரணாலயம், ஆமை குஞ்சு பொரிக்கும் இடம் மற்றும் பசுமையான தென்னந்தோப்பு போன்ற அழகியல் காட்சிகளை கண்டுகளிக்கலாம். மேலும் அங்குள்ள கண்ணை கவரும் கடற்கரையில் ஓய்வெடுக்கலாம். தீவை முழுவதும் காண அங்கு படகு சவாரி செய்து மகிழலாம். மினிகாய் தீவு: லட்சத்தீவின் தெற்கே உள்ள தீவு, இது. இங்கு தனித்துவமாக, செல்லும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது பவளப்பாறை அமைப்பு. நீங்கள் இங்கே ஸ்கூபா டைவிங் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் சூரியனை கண்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம். கல்பேனி தீவு: மூன்று தீவுகளின் குழுவால் இந்த கல்பேனி தீவு சூழப்பட்டுள்ளது, நாம் வெறும் கண்ணால் கடலின் அடிப்பகுதி வரை தெளிவாக காணும் வகையில் கடலின் நீர் காட்சி அளிப்பது சிறப்பம்சம். மற்ற கடற்கரையை விட இது மிகவும் பிரபலமானதும் கூட. நீங்கள் இந்த பகுதியில் நீச்சல் அடிக்கலாம். மீன்பிடிக்க செல்லலாம். அகத்தி தீவு: லட்சத்தீவுக்கான நுழைவாயில் இது. அற்புதமான குளம், அழகான கடற்கரைகள் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு இந்த தீவு பெயர் பெற்றது. நீச்சல், படகு சவாரி மற்றும் ஸ்டாண்ட்-அப் பேடில்போர்டிங் போன்றவற்றை நீங்கள் இங்கு செய்து அனுபவிக்கலாம். கவரட்டி தீவு: லட்சத்தீவின் நிர்வாகத் தலைநகரான கவரட்டி, உள்ளூர் சந்தை மற்றும் கடைகள் நிறைந்திருக்கும் பகுதி. இங்கு உங்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மற்றும் கடல் சம்மந்தமான பொருட்களை வாங்கலாம். அழகான நீர்நிலை கொண்டதுடன் பரபரப்பான மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாகும். மரைன் அக்வாரியம், புகழ்பெற்ற உஜ்ரா மசூதிக்கு செல்லலாம். மேலும் படகு சவாரி செய்து வண்ணமயமான பவளப்பாறைகளைக் காணலாம். இதுமட்டுமல்லாமல் பங்காரம் அட்டோல், ஆண்ட்ரோட் தீவு, பிட்டி பறவைகள் சரணாலயம், கடல் அருங்காட்சியகம், கத்மத் தீவு, அமினி கடற்கரை, கில்டன் தீவு, தின்னகர தீவு, அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள், அழகான நீல நிறத்திலுள்ள தண்ணீர் கொண்ட இடங்கள், நீர் விளையாட்டுகள் உள்ள இடங்கள் போன்ற ஒவ்வொரு இடங்களும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எப்போது செல்ல உகந்த காலம்: லட்சத்தீவுக்கு செல்வதற்கு ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களாகும். இந்த மாதங்களில் இதமான வெயிலுடன் காலநிலை நன்றாக இருக்கும். மேலும் இங்கு குறைந்த எண்ணிக்கையிலான தங்கும் விடுதிகளே காணப்படுகின்றன. எனவே தங்குமிடத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வதும் முக்கியமானது. லட்சத்தீவை அடைவது எப்படி? கொச்சி, மங்களூரு வழியாக லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கேரளாவின் கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானங்களும், கப்பல்களும் உள்ளன. விமானம் மூலம் செல்வதென்றால், லட்ச தீவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது. அது அகத்தி தீவில் உள்ள `அகட்டி விமான நிலையம்’. இந்த விமான நிலையம் கொச்சி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. லட்சதீவு பயணம் செல்ல விரும்புபவர்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். விமானத்தில் அகட்டியை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் செலவாகும். கப்பல் மூலம் செல்லவேண்டும் என்றால் கொச்சியிலிருந்து ஏழு கப்பல்கள் லட்சத்தீவுக்கு சேவை வழங்குகின்றன. இதில் செல்ல 14 முதல் 20 மணி நேரம் வரை ஆகும். அமைதியை விரும்புகிறவர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், சாகச வீரர்களுக்கும் லட்ச தீவானது சிறந்த இடம் என்று சொல்வதில் தவறேதுமில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/lets-go-on-a-trip-to-lakshadweep-to-see-the-beautiful-group-of-islands




