விரதங்களில் மிக உன்னதமான விரதமாக கருதப்படும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்ம நாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து பகவானை வழிபடுவதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் அருளைப் பெறலாம். இதன்மூலம் எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது, வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகாதசி. இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தான் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவ்வகையில் நாளை புரட்டாசி வளர்பிறை ஏகாதசி தினம் ஆகும். இந்த நாளில் வழக்கமான நியதிகளை பின்பற்றி விரதம் இருந்து, பகவானை வழிபடுவதுடன், மழை வளம் பெருகவேண்டியும், தண்ணீர் பஞ்சம் போக்க வேண்டியும் பகவானிடம் பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்காக, ஆண்டாள் அருளிய இந்த திருப்பாவை பாசுரத்தை பாராயணம் செய்யவேண்டும். ஆண்டாள் பாசுரம் “ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழி போல்மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” விளக்கம் “மழைக் கடவுளே! நீ உனது கொடையில் சிறிதும் குறை வைக்காமல், கடலுக்குள் புகுந்து நீரை முகந்து கொண்டு கம்பீர முழக்கத்துடன் மேலே செல்லவேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல், மழையை பொழியச் செய்யவேண்டும்” என்று வேண்டுகிறாள் ஆண்டாள். அதாவது, இந்த பாசுரத்தில் மழை பொழியும் நிகழ்வானது, உலகைக் காக்கும் ஆதிமுதல்வனான திருமாலின் திருமேனி மற்றும் அவரது திவ்ய ஆயுதங்களோடு ஒப்பிடப்பட்டு அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. எனவே, புரட்டாசி வளர்பிறை ஏகாதசி தினத்தன்று, விரதம் இருந்து, ஆண்டாளின் இந்த பாசுரத்தை பாராயணம் செய்து பகவானை வழிபடுவதன்மூலம் இந்திரனின் அருளையும் வருண பகவானின் கருணையையும் ஒருங்கே பெற முடியும். இந்திரன், வருணன் இருவரையும் உள்ளிருந்து அந்தர்யாமியாக இருந்து இயக்குபவராக மகா விஷ்ணு இருப்பதால், அவரை வழிபடுவதால் இந்திரன் மற்றும் வருண பகவானின் செயல்கள் தூண்டப்படும். மழை வளம் பெருகி தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த ஏகாதசி நாளில் திருவோண விரதமும் வருவதால், தனியாக திருவோண விரதம் இருக்கவேண்டியதில்லை. ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்போது திருவோண விரதம் அனுஷ்டித்த புண்ணியமும் சேர்ந்துவிடுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/this-ekadashi-resolves-water-scarcity-devotees-to-recite-aazhi-mazhai-kanna-pasuram




