சென்னை, புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற அவசரப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; மெத்தனப் போக்குக்கு தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்கள்: தவெக அரசின் மெத்தனப் போக்குக்குக் கண்டனம்! தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டால், பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்குக் கூடத் தண்ணீரின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ள நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தவெக அரசும் குடிநீர் வடிகால் வாரியமும் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 59 அணைகள் வறட்சி மாநில நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 முக்கிய அணைகளில் 59 அணைகள் வறண்டுவிட்டன; நிலத்தடி நீர்மட்டமும் முற்றிலும் சரிந்துவிட்டது. பல மாவட்டங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையைச் சமாளிக்கச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறையிடம் நிதி கேட்க அதிகாரிகள் தயங்குவது தற்போதைய ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டையே காட்டுகிறது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட வழங்கத் தவறிய தவெக அரசு, இனியாவது விழித்தெழுந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற அவசரப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். வலியுறுத்தல் மேலும், தற்போதைய வறட்சி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள நீர் ஆதாரங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களைத் தூர்வாரிச் சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளங்களின் கரைகளை உயர்த்தி, அவற்றிலுள்ள வண்டல் மண்ணை அகற்றி, வரும் காலங்களில் விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் தண்ணீரைச் சேமித்து வைக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-of-tamil-nadu-suffering-from-water-scarcity-nainar-nagendran-condemns-the-governments-lethargic-attitude




