ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ‘ஆடிப்பூரம்’. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை 'ஆடிப்பூரம்' என்று கொண்டாடுகிறோம். உலக நன்மைக்காக ஆடிப்பூர நாளில் உமாதேவி அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே, இது தேவிக்குரிய நாளாகவே போற்றப்படுகிறது. தாய்மை அடைந்த பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம். அதுபோல உலகை காக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தி மகிழ்கிறார்கள். பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அன்னைக்கு வண்ண வண்ண வளையல்களால் அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அந்த வளையல்களை பெற்று, அணிந்துகொண்டால் மனம் போல் வாழ்க்கை அமையும், மங்கலம் நிலைத்திருக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பூர வழிபாடு ஆடிப்பூர நாளில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்தும், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, புடவை சாற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் கைகூடும். ஆடிப்பூர நாளில்தான், சித்தர்களும், முனிவர்களும் தங்கள் தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு ஆடிப்பூரம், நாளை மறுநாள் (14.8.2026) வெள்ளிக்கிழமை வருகிறது. அந்நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பாகும். இயலாதவர்கள், வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டு புடவை சாற்றியும், நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் ஆடிப்பூரத்தில் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக போற்றப்படுபவர், ஆண்டாள் நாச்சியார். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்களை அருளியவர். திருவில்லிபுத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டவர். அவ்வாறு பெரியாழ்வாரின் திருக்கரங்களில் ஆண்டாள் வரப்பெற்ற நாளாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. பெரியாழ்வார், ஆண்டாளை அன்போடும் பண்போடும் வளர்த்தார். ஆண்டாள் வளர வளர கண்ணன் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களை பறித்து, அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படி பெருமாளுக்கு கொடுத்து அனுப்பும் மாலைகளை, பெருமாளுக்கு சாற்றுவதற்கு முன்பாகவே ஆண்டாள் அணிந்து பார்ப்பார். ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டார். கோபம் கொண்ட அவர், “இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்துவிட்டாயே” என்று ஆண்டாளை கடிந்துகொண்டார். பின்னர் பெரியாழ்வார், இதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். இதையடுத்து, அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், "எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே தரவேண்டும்” என்றார். சிறப்பு பூஜைகள் அப்போதுதான், ஆண்டாள் சாதாரண குழந்தை இல்லை, தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், பெருமாளின் கட்டளைப்படி, பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ஆண்டாள், அரங்கநாதரி டம் ஒளியாக கலந்துவிட்டார். இதனால் ஆடிப்பூரத்தன்று, வைணவ தலங்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருமணமாகாத பெண்கள் அதில் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aadi-pooram-worship-for-excellent-life




