சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்த அரசு தீர்மானித்து இருப்பதாகவும், இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது போகக்கூடாத ஊருக்கு வழி காட்டும் செயல் என்பது மட்டுமின்றி, துணை வேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல் ஆகும். இன்றைய நிலையில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருப்பது தேடல்குழுவில் மூவர் இருக்க வேண்டுமா, நால்வர் இருக்க வேண்டுமா அல்லது ஐவர் இருக்க வேண்டுமா? என்பது இல்லை. இந்த சிக்கல் அதையெல்லாம் கடந்து வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதைய சிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்-அமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா? என்பது தான். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணை வரும் 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால், அத்துடன் இந்த சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டு விடும். இத்தகைய சூழலில் இந்த விவகாரத்தை இரு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இழுத்துச் சென்று, எல்லா அதிகாரங்களையும் கவர்னரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்? இரன்டாவதாக, தேடல்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்துவது தேவையற்றது மட்டுமின்றி, சட்டவிரோதமும் ஆகும். பல்கலைக்கழக துணை வேந்தர் தேடல் குழுக்களை கவர்னரோ, முதல்-அமைச்சரோ, உயர்கல்வி அமைச்சரோ தன்னிச்சையாக அமைக்க முடியாது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், அதனடிப்படையில் மட்டும் தான் அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, கவர்னரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். அதை அனுமதிக்க முடியாது. கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக அரசுக்கும், கவர்னருக்கு மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தான் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்-அமைச்சருக்கு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அரசின் விருப்பப்படியே 3 உறுப்பினர்கள் கொண்ட குழு வாயிலாக துணை வேந்தர்களை நியமிக்கலாம்; தீர்ப்பு எதிராக வந்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து பின்னர் யோசிக்கலாம். அதற்கு முன்பாக இது குறித்து பேசுவதே நீதிமன்ற விசாரணையில் குறுக்கிடுவது ஆகும். இது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை கடுமையாக பாதிக்கும். மூன்றாவதாக, துணை வேந்தர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்தப்பட்டால், அது பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்று கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படும். அந்த வழக்குகளை விசாரித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அது வரை பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. அப்படி ஒரு நிலையை அரசே ஏற்படுத்தக்கூடாது. இவை அனைத்துக்கும் மேலாக தமிழக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும். அது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மொத்தமுள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல இந்த சிக்கலுக்கு விரையில் சட்டத் தீர்வு கிடைக்கவுள்ள நிலையில், புதிய சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது. எனவே, துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் திட்டத்தை அரசி கைவிட வேண்டும். மாறாக, வரும் 29&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கை திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-government-trying-to-hand-over-all-powers-to-the-governor-anbumani-kattam




