செந்தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசும் ஆற்றல் படைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது துறைகள் மற்றும் முதல்-அமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நேற்று முன்தினம் சட்டசபையில் உரையாற்றினார். சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, தடங்கலோ, பிசகலோ இல்லாமல் மடை திறந்த வெள்ளம்போல வார்த்தைகள் பாய்ந்தோடியதை அவை கண்டது. இன்றைய இளம் தலைமுறையினர் அன்னைத் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும், படிப்பதற்கும் சிரமப்படுகிறார்கள் என்ற குறை நீண்டகாலமாக இருந்துவருகிறது. தங்களின் பெரும்பாலான நேரத்தை செல்போன்களிலும், இணையத்திலும் செலவிடுவதால், தமிழில் தங்குதடையின்றிப் பேசுவதற்கும், வாசிப்பதற்கும் பலர் தடுமாறுகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் தனது பதிலுரையில் அமைச்சர் ராஜ்மோகன், 'வாசிப்பை நேசிப்போம்', 'தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு' என்ற தலைப்புகளில் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டார். மாணவர்களிடையே வாசிப்பை வாழ்நாள் பழக்கமாக உருவாக்கும் நோக்கில், அரசு பள்ளிகளுடன் அருகில் உள்ள பொது நூலகங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஆண்டுதோறும் மாணவர்களின் வயது, வகுப்புக்கு ஏற்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு 150 சிறார் நூல்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நூல்களும் வழங்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் தலா ஒன்று வீதம் வழங்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்பை மையமாகக் கொண்ட அறிவுசார் கலாசாரம் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் ரூ.145 கோடியில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு எதிர்கால தூண்களான மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை நேசிக்கச் செய்யும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதுபோல மாணவர்களிடையே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு அவர்களின் பொது அறிவை விசாலமாக்கி, சிந்தனைத் திறனையும் வளர்க்க உதவும். தமிழைச் சரளமாகப் பேசுவதிலும், சரியாக உச்சரிப்பதிலும் மாணவர்களிடையே குறை உள்ளது. குறிப்பாக, தமிழ்மொழிக்கே உரித்தான ழ, ண, ற போன்ற எழுத்துகளைச் சரியாக உச்சரிப்பதிலும், அவற்றைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்துவதிலும் பலர் தடுமாறுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 21-ம் நூற்றாண்டுக் கல்வியில் மொழியறிவுடன் விமர்சனச் சிந்தனை, படைப்பாற்றல், புதுமைத் திறன், தொடர்புத் திறன் மற்றும் கருத்து வெளிப்பாடு ஆகிய திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய திறன்சார்ந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை, விமர்சனச் சிந்தனை, சுயசிந்தனை மற்றும் கருத்துகளைப் புதுமையாக வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்தும் இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இந்த இரண்டு அறிவிப்புகளும் வெறும் போட்டிகளாகவோ, நூல்கள் வழங்கும் திட்டமாகவோ நின்றுவிடாமல், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும், தமிழில் சிந்தித்து சரளமாகப் பேசி, கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனையும் வளர்க்கும் முயற்சியாக அமையவேண்டும். 'வாசிப்பை நேசிப்போம்', 'தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு' என்ற அமைச்சர் ராஜ்மோகனின் முயற்சிகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், மூளைக்கு சிறகுகளை கொடுத்து கற்பனைக்கு வடிவம் கொடுப்பதோடு அறிவையும் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும். இது அறிவிலும், பேச்சாற்றலிலும், வாசிப்பு திறமையிலும் சிறந்த புதிய மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-speech-is-our-lifebreath




