மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 4-ம் நாளான இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் திருவிளையாடல் லீலை நடைபெறும் முக்கிய உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலை தொடர்பான அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடைபெற்றது. தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த சிறப்பு லீலை காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிளையாடல் லீலை இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:- மதுரையை ஆண்ட வங்கிசூடாமணி பாண்டியன் (செண்பக பாண்டியன்), இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். இளவேனிற் காலத்தில் அரசி அங்கிருக்கும்போது அந்த நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய வாசனையை மன்னன் உணர்ந்தான். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான். தன் சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்து அதனை சங்க மண்டபத்தில் தொங்க விட்டான். அரசவையில் இருந்த பல புலவர்கள், மற்றும் வேறு சில புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் சந்தேகம் தீரவில்லை. அப்போது மதுரையில் ஆதி சைவர் மரபில் தோன்றிய தருமி என்ற பிரம்மச்சாரி, அரசனின் அறிவிப்பினை அறிந்தான். சொக்கநாதரிடம் (சுந்தரேஸ்வரர்) பேரன்பும் பக்தியும் கொண்ட அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட தருமி, ஒருவேளை உணவிற்கு மிகவும் திண்டாடினான். ஆதலால் அவனுக்கு யாரும் பெண்தர முன்வரவில்லை. எனவே, சொக்கநாதரிடம் சென்று மன்னனின் சந்தேகத்தைப் போக்கி ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருள் செய்யும்படி மனமுருகி வேண்டினார். அப்போது இறைவன், புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். பொற்கிழி தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அந்த பொற்கிழியை அவருக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது நக்கீரர் குறுக்கீட்டு அந்த பாட்டில் பிழை உள்ளது என்று கூறினார். உடனே தருமி தனக்கு பாட்டு எழுதி கொடுத்த புலவரிடம் (இறைவன்) சென்று ஐயனே உன் பாட்டில் குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர் என்று புலம்பினான். உடனே இறைவன் புலவர் வடிவத்தில் சென்று தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்ற அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் நக்கீரர் விழுந்தார். அதன்பின்னர் இறைவனும் மறைந்தார். இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கிரங்கி, பொற்றாமரை குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராணம் கூறுகிறது. அடுத்த நிகழ்வுகள் திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (20-ந் தேதி) உலவவாக்கோட்டை அருளிய லீலை, மறுநாள் (21-ந் தேதி) பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு சுந்தரேஸ்வரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 24 ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 25 ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 26 ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். 27-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/madurai-meenakshi-amman-temple-aavani-moolam-festival-dharumikku-porkizhi-valangiya-leelai




