Articolo completo
திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து விட்டார் வைகோ. கூடவே வருங்காலங்களில் தவெக-வுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் செய்வோம் என்றும் சொல்லியிருக்கிறார், இந்தத் தருணத்தில் கட்சி பயணித்த கடந்த முப்பதாண்டுகளில் வைகோ எடுத்த பல முக்கிய முடிவுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாமா? வைகோ முதல் கோணல்! 'கலைஞரின் போர்வாள்' என்ற அடைமொழியுடன் வலம் வந்தவருக்கு திமுக-வில் பிரச்னை. 1994 ல் கட்சியிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கினார். இளைஞர்கள் சிலர் வைகோவுக்காக தீக்குளித்தனர். எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பொன் முத்துராமலிங்கம் என திமுக-வின் முக்கியத் தளபதிகளாக இருந்த பலர், வைகோ பின்னால் சென்றார்கள். பிரமாண்டமாக கூட்டம் நடத்தினார். பத்திரிகைகள் 'திமுக-வில் மீண்டுமொரு செங்குத்துப் பிளவு' என எழுதின. ஆனால் அடுத்த இரண்டாவது ஆண்டு சட்டசபைத் தேர்தல் (1996) வந்தது. 91 - 96 வரையிலான ஜெ அரசின் மீது மக்கள் கடும் கோபத்திலிருந்தனர். திமுக - அதிமுக என தொடர்ந்து வந்த தேர்தல் வரலாற்றில் மூன்றாவது அணியாக சில சிறு கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு தனித்துக் களமிறங்கினார் வைகோ. அந்த முதல் முடிவே அவருக்குச் சாதகமாக அமையவில்லை. ஜெயலலிதா வேண்டாமென நினைத்த மக்கள் கலைஞரைத்தான் நம்பினார்களே தவிர வைகோவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஜெயித்தும் கவிழ்ந்த ஆட்சி! அடுத்து கட்சி சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் (1998) வந்தது. சட்டசபைக்கே தனித்துப் போட்டி என்பது வேலைக்கு ஆகாது என நிரூபணமாகி விட்டதால், கூட்டணி காண முடிவெடுத்து அதிமுக - பாஜக பக்கம் போனார். கூட்டணி ஜெயித்த போதும் அந்த ஆட்சி ஒரு வருடத்தில் கவிழ்ந்து விட்டது. ஜெயலலிதா பேக் டு திமுக! அடுத்த வருடம் (1999) நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாய்க் கழகமான திமுக-வுடன் கூட்டணி வைத்தார். கட்சியை உடைத்து வெளியேறிய ஐந்தாவது ஆண்டிலேயே திமுக-வுடன் கை கோர்க்கும் முடிவை எடுத்தார். கூட்டணி வென்றது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தனர் மதிமுக எம்.பி.க்கள். மறுபடியும் தனி வழி... ஏக டெபாசிட் காலி! அடுத்த இரண்டாவது வருடம் அதாவது 2001. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை திமுக கூட்டணியில் இருந்த வைகோ, சீட் பிரச்னையில் வெளியேறினார். விளைவு, கட்சி சந்தித்த 2வது சட்டசபைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி. ஆறு இடங்களில் மட்டுமே டெபாசிட் கிடைத்தது. ம.தி.மு.க. ஜெயில்ல போட்டாங்க, அதனாலென்ன? 2002ம் ஆண்டு அதிமுக அரசால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2006) கைதுசெய்த ஜெயலலிதாவுடன் கரம் கோத்தார். தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. ஆணியே பிடுங்க வேண்டாம்! 2011 சட்டசபைத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவர் மீது பரிதாபத்தையே வரவழைத்தது. புதிதாக வந்திருந்த தேமுதிக-வுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் தந்ததால் கோபித்துக் கொண்டு அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். Vijayakanth | விஜயகாந்த் மக்கள் விரும்பாத நலக் கூட்டணி! 2016 தேர்தலில் திருமாவளவன், கம்யூனிஸ்ட்களைச் சேர்த்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி மூன்றாவது அணியாகப் போட்டியிட்டார். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர். தேர்தலில் கூட்டணி படுதோல்வி. திமுக டு தவெக! 2019 லோக் சபா தேர்தலில்தான் நீண்ட இடைவெளிக்குப் பின் கலைஞர் இல்லாத சூழலில் ஸ்டாலினுடன் கரம் கோத்து மீண்டும் திமுக பக்கம் வந்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி கடைசியாக நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் வரை கூட்டணி தொடர்ந்த நிலையில், தற்போது வெளியேறி தவெக பக்கம் செல்வதாக அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் - வைகோ 'சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பவர்' என வைகோ குறித்துக் குறிப்பிடுவர் சிலர். 'நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் இழுக்குதே' என வண்டு முருகன் காமெடியில் வடிவேலு பேசுகிற டயலாக் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




