திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் இரவில் பெரிய சேஷ வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. கருட கொடியேற்றம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா, நவராத்திரி பிரம்மோற்சவ விழா என இரண்டு பிரம்மோற்சவங்கள் நடக்கின்றன. அதில் 'சாலகட்ல' எனப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நேற்று மாலை 6.21 மணியில் இருந்து 6.35 மணி வரை 'மீன' லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முன்னிலையில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் கோவிந்த நாமம் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பிரதான அர்ச்சகர்களும், கங்கணப்பட்டரும் தங்கக் கொடிமரத்தில் கருட கொடியை ஏற்றினர். முப்பத்து முக்கோடி தேவதைகளையும், அஷ்டதிக் பாலகர்களையும் பிரம்மோற்சவத்துக்கு அழைக்கும் வகையில் கருட கொடியேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அர்ச்சகர்கள் கூறினர். கொடியேற்றும் நிகழ்ச்சியில் திருமலை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கருட கொடியேற்றம் முன்னதாக, தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியையும், பரிவார தேவதைகளான அனந்தர், கருடர், சக்கரத்தாழ்வார். சேனாதிபதியையும், மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியையும் கோவிலின் நான்கு மாட வீதிகளில் அதிகாரிகள், பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பெரிய சேஷ வாகன வீதிஉலா பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக வைகுண்டநாதர் திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலின் நான்கு மாடவீதி கேலரிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா. கோவிந்தா.’ என பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். தேவஸ்தான வாரிய தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி 9 மாநில கலைஞர்கள் பெரிய சேஷ வாகன சேவையின்போது, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு, அசாம், மகாராஷ்டிரா, மணிப்பூர், புதுச்சேரி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன. குறிப்பாக, குற்றாலக் குறவஞ்சி, அசாமின் புகழ்பெற்ற பிஹு நடனம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/brahmotsavams-sri-malayappa-swamy-celestial-ride-on-the-peddasesha-vahanam




