சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2,800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும், தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல. எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/districtwise-medical-waste-treatment-plants-needed-ttv-dhinakaran




