புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களில் யாரேனும் இறந்துவிட்டால், உடலை அடக்கம் செய்யச் சரியான மயான வசதியோ அல்லது மயானத்திற்குச் செல்ல பாதையோ இல்லாமல் பல ஆண்டுகளாக கடும் வேதனையைச் சந்தித்து வந்தனர். இப்பிரச்னைக்கு உடனடி அரசியல் சாசன அடிப்படையிலான தீர்வு வேண்டி, 'நீலம் பண்பாட்டு மையத்தின்' புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் (20-07-2026, மனு எண்: 630) மனு அளித்தார். அத்துடன் இந்த மனுவினை அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான முகமது பர்வேஸின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். தண்ணீர் ஊறும் பழைய மயானம் அது பற்றி நீலம் பண்பாட்டு மையத்தின் முருகானந்தத்திடம் பேசினோம். “திருவள்ளுவர் நகரில் 30 ஆதிதிராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கே இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய நீர் தேங்கிய வாய்க்காலில் குழி தோண்டும் வீடியோ பதிவு எனக்குக் கிடைத்தது. அந்த வீடியோவை உடனடியாகப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், தொகுதி அமைச்சர் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன். அதன்பின், திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் நேரில் சென்று மனு கொடுத்தேன் (எண்: 630). மனுவைப் பார்த்த ஆட்சியர் மேடம், கூட்டத்திற்கு வந்திருந்த மணமேல்குடி வட்டாட்சியரை நேரில் கூப்பிட்டு மனுவைக் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், நமது மனுவை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். அமைச்சரின் அலுவலகத்தில் இருந்தும் நம்மைத் தொடர்புகொண்டு விவரம் கேட்டார்கள். சுமார் 30-40 ஆண்டுகளாக இருந்த இந்த நீண்டநாள் பிரச்னைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காகத் தமிழக அரசுக்கும், தொகுதி அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எனது நன்றிகள்." என்றார். முருகானந்தம் - மணமேல்குடி தாசில்தார் ஆய்வு இது தொடர்பாக மணமேல்குடி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் கூறுகையில், ``திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமின் போதே ஆட்சியர் மேடம் இந்த மனுவை என்னிடம் வழங்கி, உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். அதன்பேரில், அன்றைய தினம் மதியமே நாங்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று இடத்தைப் பார்வையிட்டோம். திருவள்ளுவர் நகரில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு மழைக்காலத்தில் கண்மாய் உபரி நீரும் வாய்க்கால் நீரும் தேங்குவதால் வழக்கமான இடத்தை அடக்கத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஒதுக்கப்பட்ட புதிய இடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சர்வே எண்- 63/9-ல் மயானத்திற்குப் புதிய இடம் கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் எல்லைக் கற்கள் நட்டுப் பாதை மற்றும் மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு நிலுவைப் பணிகள் அனைத்தும் துரிதமாக நிறைவு செய்யப்பட்டு மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பயன்படுத்தும் வகையில் மயான வசதி அமைத்துத் தர வருவாய்த்துறை சார்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்றார் நீண்ட காலமாக ஆதிதிராவிட மக்களுக்கு நிலுவையில் இருந்த சுடுகாட்டுப் பாதை மற்றும் மயானப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் திருவள்ளுவர் நகர் மக்கள் நெகிழ்ச்சியுடன் தமிழக அரசுக்கு, நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/manamelkudi-ministers-order-resolves-crematorium-issue-in-24-hours




