புதுடெல்லி ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரெயில், அரியானா மாநிலத்தில் வடக்கு ரெயில்வேயின் ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஹைட்ரஜன் ரெயில் சேவையை அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ரூ.5-ல் டிக்கெட் இந்த ரெயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று குறைந்த கட்டணமாகும். பயண தூரத்துக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று ரயிலில் பயணிக்க பலரும் ரூ.5 டிக்கெட் வாங்கியே பயணம் செய்தனர். இயக்கப்படும் வழித்தடம் இந்த ஹைட்ரஜன் ரெயில் ஜிந்த் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சோனிபட் வரை இயக்கப்படுகிறது. வழியில் ஜிந்த் சிட்டி, பாண்டு பிந்தாரா, லாலித் கேரா ஹால்ட், பாம்பேவா, இசாபூர் கேரி ஹால்ட், புடானா ஹால்ட், காண்ட்ராய் ஹால்ட், ரப்ரா ஹால்ட், லாத், மோகனா, பர்வாஸ்னி ஹால்ட் உள்ளிட்ட பல நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கு மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டராகும். எப்படி இயங்குகிறது? டீசல் அல்லது மின்கம்பி வழி மின்சாரத்தை பயன்படுத்தும் வழக்கமான ரெயில்களைப் போல இல்லாமல், இந்த ரெயில் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் ரெயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வேதியியல் வினையில் ஈடுபட்டு மின்சாரத்தை உருவாக்குகின்றன. இதன் விளைவாக நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே உருவாகுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு மிகவும் குறைவாகும். இந்த ரெயிலில் 10 பெட்டிகள் உள்ளன. இதில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் 2 டிரைவிங் பவர் கார்கள் மற்றும் 8 பயணிகள் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் இயக்க அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் பயணம் செய்யும் வசதி உள்ளது. மேலும் ஹைட்ரஜன் கசிவு, புகை, தீப்பற்றுதல் மற்றும் அதிக வெப்பநிலை போன்றவற்றை உடனுக்குடன் கண்டறியும் நவீன பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 3 ஆயிரம் கிலோ ஹைட்ரஜன் சேமிப்பு வசதி இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜிந்த் பகுதியில் நாட்டின் மிகப்பெரிய ரெயில்வே ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வசதி உள்ளது. சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப இந்த மையம் அமைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ரஜன் ரெயில் சேவை அறிமுகத்தின் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. 2021 ல் தொடங்கிய பணி; ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின. ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது. இத்திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, ரயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/how-much-does-a-ticket-for-the-countrys-first-hydrogen-train-cost-do-you-know-its-special-features




