சென்னை, சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசி வருகிறார்கள். காமராஜர் பெயர் இந்த சூழலில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் உணவுத் திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? வேறு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, காமராஜர் பெயரை வைக்கலாமே? நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது ஏன்? முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்? ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனபெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி” என்று அவர் கூறினார். தந்தை பெரியார் நூலகம் தொடர்ந்து பேசிய அவர், “தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என்கிறீர்கள். தவெக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பதனை அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். பொதுப்பணித்துறை அமைச்சர் பிறந்த வடஆற்காடு மாவட்டம், இன்று அது வேலூர் மாவட்டம் “ என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நான் பிறந்தது திருச்சி மாவட்டம் என்பதை பதிவு செய்கிறேன். நாங்கள் பெரியார் கொள்கையை பின்பற்றுவதாக தம்பட்டம் அடிப்பதாக பேசினார். இன்றும் அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை, எங்கள் அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது” என்று கூறினார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது மானியக் கோரிக்கை மீதான கருத்துக்களை மட்டும் பேசுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு அறிவுறுத்திய போது, அவர்களின் உரையாடலை முதல்-அமைச்சர் விஜய் கூர்ந்து கவனித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-the-breakfast-scheme-named-after-kamarajar-dmk-mla-ev-velu-asks



