அரிசி, காய்கறி, முட்டை, சமையல் எண்ணெய், எல்.பி.ஜி. பெட்ரோல், டீசல் விலை என்று எல்லா செலவுகளும் அதிகரித்துள்ளது. குடும்பத்தலைவிகளான இல்லத்தரசிகள் சிக்கனத்தை கடைப்பிடித்து மாதந்தோறும் பட்ஜெட் போட்டு செலவழிப்பார்கள். இதில் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு போன்ற சில தவிர்க்கமுடியாத செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியே தீர வேண்டும். இதுதவிர மளிகைப் பொருட்கள், காய்கறி, முட்டை போன்ற சாப்பாட்டுக்காக வாங்கும் செலவு மற்றும் துணிமணிகள் வாங்க ஆகும் செலவு, பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. போன்றவற்றுக்காக ஆகும் செலவு அதன் விலையில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றம்-இறக்கத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கான விலை குறைந்தால் செலவும் குறையும், அதை வைத்து எதிர்கால தேவைக்காக சேமிக்க முடியும். ஆனால் இப்போது பொருட்களின் விலை கடந்த 2 மாதங்களாக கடுமையாக உயர்ந்துகொண்டே போவதால் மாதாந்திர செலவில் துண்டு விழுவதாக இல்லத்தரசிகள் புலம்புவதை பரவலாக கேட்க முடிகிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக தகவலின்படி, இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு பணவீக்கம் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் 4.5 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா உடனான மோதல் காரணமாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய், உரம் போன்ற பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்த பொருட்களின் விலை உயர்வுக்கு வித்திட்டது. உரத்தின் விலை உயர்ந்ததால் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்தது. பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறந்துவிடப்படும் நீர் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக காவிரி வறண்டு போனதால் குறுவை நெல் சாகுபடியும் 93 ஆயிரம் ஏக்கர் குறைந்துவிட்டது. அரிசி, காய்கறி, முட்டை, சமையல் எண்ணெய், எல்.பி.ஜி. பெட்ரோல்-டீசல் விலை என்று எல்லா செலவுகளுமே விண்ணை நோக்கி சென்றுவிட்டன. அரிசியை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரித்திருக்கிறது. இதனால் 26 கிலோ கொண்ட ஒரு அரிசி பை விலை ரூ.200 முதல் ரூ.250 வரை உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டதால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் அரிசியைத்தான் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலைதான் காய்கறிக்கும் இருக்கிறது. வெங்காயம் உள்பட பெரும்பாலான காய்கறிகள் மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டியது இருக்கிறது. புரத சத்தை தரும் முட்டை, சிக்கன், மீன் விலையும் உயர்ந்துள்ளதால் அசைவ உணவு பிரியர்கள் தங்களது விருப்ப உணவுகளுக்கு அதிகம் செலவிடவேண்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைதான் சட்டை பைகளில் ஓட்டை விழ வைக்கிறது என்றால் அடுத்த மாதம் முதல் திருமண சீசன் தொடங்குகிறது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க நினைத்தால் தங்கம், வெள்ளி விலையும் எகிறி விட்டது. ஆக அது இது என்று இல்லாமல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே போவதால், வரவுகளை முந்திக்கொண்டு வந்து நிற்கும் செலவுகளை ஈடுகட்ட மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதற்கு இயற்கையாக ஏற்பட்ட நிலைதான் காரணம் என்றாலும் மக்களின் சுமையை இறக்கி வைக்க அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். அதுவரை கசப்பான இந்த வலியை மக்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். இயற்கை கருணை காட்டினால்தான் செலவை குறைத்து வரவை பெருக்கமுடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/others/thalayangam/housewives-struggling-to-meet-monthly-expenses




