உளவன் 15கோட்டைக்குள்ளே குள்ள நரி வோல்கோவ் (Konstantin Dmitrievich Volkov). இந்தப் பெயர் நினைவிருக்கிறதா? இஸ்தான்புல்லில் இருந்து மாஸ்கோவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டாரே… ரஷ்ய துணைத் தூதராக - துருக்கியில் உளவு பார்க்குக் குழுவினரின் துணைத் தலைவராக இருந்தாரே… பிரிட்டன் உளவுத்துறை அதிகாரி கிம் ஃபில்பி இந்த நபரிடம் விசாரிக்க புறப்பட்டாரே… ஆம். அவரேதான். இப்போது அனைத்தும் நினைவுக்கு வந்திருக்கும். ரஷ்ய தூதர் மீதான பயத்தில், துரோகியாக மாறி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரிட்டன் தூதரகத்தில் தஞ்ச கோரிக்கை விடுத்தவர்தான் வோல்கோவ். சிவப்பு ட்ரோஜன் குதிரை இந்தத் தகவலை ரஷ்ய உளவு துறைக்கு கசியவிட்டது. அவர்கள் அலேக்காக தூகிக் கொண்டு போய் மாஸ்கோவில் வைத்து வோல்கோவை கொன்றனர். “இரண்டு ரஷ்ய உளவாளிகள் பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்தில் இருக்கின்றனர். மற்றொரு உளவாளி லண்டனில் உள்ள உளவுத்துறையின் ஒரு பிரிவை வழி நடத்துகிறார். (Two of them were in Foreign Office; one was head of a counter-espionage organization in London.)” - இதுதான் வோல்கோவ் கொடுத்த செய்தி. அந்த மூன்று உளாவளிகளின் பெயர்களை அறிந்து கொள்ளத்தான் கிம் ஃபில்பி இஸ்தான்புல் புறப்பட்டார். ஆனால், வோல்கோவிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பே அவர் காணாமல் போய்விட்டார். அதனால், கிம் ஃபில்பி இப்படி அறிக்கை சமர்ப்பித்தார்: 1) வோல்கோவ் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாம். 2) அதிகம் மது குடித்துவிட்டு வந்து உளறி இருக்கலாம். 3) நம்முடைய தூதரக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, வோல்கோ மீது ரஷ்யா உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் உளவுத்துறை, அத்தோடு அந்த விஷயத்தை மறந்தே போய்விட்டது. இருந்தாலும், உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் ரஷ்ய உளவாளி என்ற தகவல் அரித்துக் கொண்டுதானே இருக்கும். ஏதாவதொரு தீப்பொறி பட்டால் உடனே பற்றிக் கொள்ளும் அபாயகரமான புகைமூட்டம் அது. அதே காலக்கட்டத்தில், கனடாவில் இகோர் கூசென்கோ என்பவரும் தஞ்சமடைந்தார். அவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நபர். உளவு தகவல்களை, குறியாக்கம் - மறைகுறியாக்கம் (Encoding - Decoding) செய்யும் பணியாளர். அவரை ரஷ்யாவால் கொல்ல முடியவில்லை. கூசென்கோவிடம் பிரிட்டிஷ் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். பிரிட்டனில் உள்ள ரஷ்ய ஏஜெண்ட்களின் பெயர் பட்டியலை ஒப்படைத்தார். இப்படி ஆங்காங்கே ரஷ்ய உளவு வலைப்பின்னலின் கன்னிகள் தட்டுப்பட்டன. வழக்கமான உளவாளிகள்தான் என கடந்து செல்ல முயன்றது பிரிட்டிஷ் உளவுத்துறை. ஆனால், அமெரிக்கா இதை எளிதாக கடந்து செல்ல விரும்பவில்லை. வெனோனா (Venona Decryption Project) திட்டத்தை தோண்டித் துருவி ஆராய்ந்தனர். One Time Pad குறியீட்டை உடைத்து கிடைத்த தகவல்கள், ரஷ்யாவின் இரும்புக் கை மாயாவிகளின் வலைப்பின்னல் மீது புது வெளிச்சம் பாய்ச்சியது. வலைப்பின்னலின் கன்னிகளை இணைத்தனர். ரஷ்யாவின் ஊடுருவல் பிரமிக்க வைத்தது. அதிர்ச்சி தரத் தக்க வகையில் ஐரோப்பிய, அமெரிக்க அதிகார மையங்களில் சிவப்பு சிந்தனை கொண்டவர்கள் வீற்றிருந்தனர். குறிப்பாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பின் மிக உயர்ந்த மட்டங்களில் சோவியத் உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். குறைந்தபட்சம் அதிகாரத்தில் இருந்தவர்களை தங்கள் பிடியில் வைத்திருந்தனர். அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், பிரிட்டன் உளவுத்துறையை எச்சரிக்கை செய்தனர். பிரிட்டிஷ் உளவுத்துறையும் களத்தில் தீவிரமாக இறங்கியது. இஸ்தான்புல் பிரிட்டிஷ் துணைத் தூதர் சாண்ட்ரி ஹாமில்டன் பேஜை அழைத்து மீண்டும் விசாரித்தனர். “உங்களைச் சந்தித்த வோல்கோவ் என்ன தெரிவித்தார்? வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தெரிவிக்கவும்…” “பிரிட்டனில் பணியாற்றும் மூன்று ரஷ்ய உளவாளிகளின் உண்மையான பெயர் எனக்கு தெரியும்னு அவர் சொன்னாரு…” பேஜ் அன்றைய தினத்தில் நிகழ்ந்தவற்றை வரிசையாகக் கூறினார். “அந்தப் பெயர்களை உங்களிடம் தெரிவித்தாரா?” “அதான் சொல்லலியே… உயரதிகாரிகளிடம் நேரடியாகச் சொல்வதாகத்தானே கூறினார். அதை நான் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டேனே…” “வேறு ஏதாவது சொன்னாரா?” நன்கு யோசித்தவர், “நம்முடைய சங்கேதக் குறியீடுகளை ரஷ்யர்கள் எளிதாக உடைத்திருப்பதாகச் சொன்னார். அடுத்து, வெளியுறவுத் துறையில் இரண்டு பேர், லண்டன் தலைமை அதிகாரி மட்டத்தில் ஒரு ரஷ்ய உளவாளி இருப்பதாகச் சொன்னார்…” சாண்ட்ரி ஹாமில்டன் பேஜ் அளித்த வாக்குமூலத்தில் இருந்து நூல் பிடித்தபடி சென்றனர். இகோர் கூசென்கோ கொடுத்த ஏஜெண்ட்டுகளின் பெயர்கள், வெனோனா இடைமறிப்பு தகவல்களில் இடம்பெற்றிருக்கிறதா என சலித்தனர். ஆமாம். ஏஜெண்ட்டுகளின் பெயர்கள் இருந்தன. அதில் ஒரு ஏஜெண்ட் அனுப்பிய தகவல்கள் மூலம், டொனால்ட் மேக்லீன் (Donald Maclean) என்பவரை அடையாளம் கண்டு வட்டமிட்டனர். டொனால்ட் மேக்லீன் வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் முக்கிய அதிகாரி. அணுகுண்டு ஒத்துழைப்பு தொடர்பான ரகசிய தகவல்களை கையாளும் பிரிவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். எனவே, குறிப்பிட்ட ஏஜெண்ட் பெயருக்குரிய நபர் இவர்தான் என உறுதிப்படுத்தினர். இவர் அணுகுண்டு ஆய்வு தொடர்பான தகவல்களை ரஷியாவுக்கு கடத்தி இருக்கிறார். உடனே MI6-க்கு தகவல் கொடுத்தனர். மேக்லீனை தாய்நாட்டுக்கு திரும்பப் பெற்றுக் கொண்டது பிரிட்டன். அங்கு விசாரணை தொடங்கியது. இன்னொரு ஏஜெண்ட் பெயருக்குரிய நபரையும் வட்டமிட்டனர். அவர் பெயர் கை பர்கெஸ் (Guy Burgess). இவரும் வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார். இவரையும் விசாரணைக்கு லண்டன் வருமாறு பிரிட்டிஷ் உளவுத்துறை உத்தரவிட்டது. லண்டன் வந்த பர்கெஸ், மேக்லீனைச் சந்தித்தார். இருவரும் வசமாக சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதாக அச்சம் தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் கைது செய்யலாம். பர்கெஸ் எச்சரித்தார். மே 25-ம் தேதி (1951) இருவரும் ஒரு காரில் புறப்பட்டனர். தென் இங்கிலாந்து பகுதியில் உள்ள சவுதாம்ப்டன் துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து படகொன்றில் பாரிஸ் நகரத்துக்குச் சென்றனர். தாமதிக்காமல் கிழக்கு ஜெர்மனிக்கு விரைந்தனர். அங்கு தயாராக இருந்த ரஷ்ய உளவாளிகள், இருவரையும் பத்திரமாக மாஸ்கோவுக்கு அழைத்துச் சென்றனர். மேக்லீனும் பர்கெஸும் தப்பிச் சென்று விட்டனர். எங்கு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலை அறிந்து அதிர்ந்தது பிரிட்டிஷ் உளவுத்துறை. விசாரணைக்கு முன்பே, வெளியுறவுத்துறையில் பணியாற்றிய இரண்டு முக்கிய உளவாளிகள் தப்பி விட்டனர். இந்தத் தோல்வி பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு விடப்பட்ட சவால். வோல்கோவ் மாயமாக மறைந்தது போலவே, இந்த இருவரும் காணாமல் போய்விட்டனர். சிவப்பு ட்ரோஜன் குதிரைதான் இவர்கள் தப்பிக்கவும் உதவி செய்திருக்க வேண்டும். மேக்லீனும் பர்கெஸும் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம். MI5 அதிகாரிகள் யூகித்தனர். பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் எப்படி கம்யூனிஸம் ஆட்சி செய்யும் ரஷியாவில் வசிக்க முடியும்? கொள்கைப் பிடிப்பு குடியுரிமையைக் கூட மறுத்துவிடுமா? ஆங்கிலேயன் என்ற கர்வத்தைவிட பாட்டாளி வர்க்க அரசின் குடிமகன் என்ற அந்தஸ்து உயர்ந்ததா? பிரபுக்களாக - முதலாளிகளாக ஆணவமாக வளர்ந்தவர்களை எப்படி வளைக்க முடிந்தது கம்யூனிஸத்தால்? பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர். எப்படியாவது சிவப்பு ட்ரோஜன் குதிரையை கண்டுபிடித்து விட வேண்டும். அதையும் தவறவிட்டால்? பிரிட்டன் உளவுத்துறை தகவல்கள் என்னென்ன எங்கெங்கு சிக்கி இருக்கிறது? தெரிந்து கொள்ளவே முடியாமல் போய்விடும். அதனால் வெனோனா தகவல்களை சல்லடை போட்டுத் தேடினர். லண்டனில் உள்ள அந்த உளவுப் பிரிவு தலைமை அதிகாரி யார்? அவருக்கு ஏஜெண்ட் பெயர் என்னவாக இருக்கும்? எந்தப் பிரிவுக்கு அவர் தலைவராக இருக்கிறார்? ஒவ்வொரு தகவலையும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். வெனோனா இடைமறித்து வைத்திருந்ததோ 3000-க்கும் மேற்பட்ட தகவல்கள். அத்தனையையும் அலசினர். கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு வகையில் யோசிக்கத் தொடங்கினர். மேக்லீன் - பர்கெஸ் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலை எடுத்தனர். பர்கெஸுக்கு நெருக்கமானவர் கிம் ஃபில்பிதான். பர்கெஸ் வாஷிங்டனுக்கு மாற்றலாகிச் சென்ற பணியாளர். அங்கு ஃபில்பியின் வீட்டில்தான் தங்கி இருந்தார். 1949 வாக்கில் MI6 அதிகாரியாக பணி மாறுதலாகி கிம் ஃபில்பி வாஷிங்டனுக்குச் சென்றார். அவர் தங்கி இருந்த வீட்டின் கீழ் அறையில்தான் பர்கெஸ் தங்கினார். தனி வீடு கிடைக்கும்வரை தங்கிக் கொள்வதாகத்தான் பேச்சு. நாளடைவில் ஃபில்பியோடே பர்கெஸ் இருந்துவிட்டார். அதற்காக ஃபில்பியை சந்தேகப்பட முடியுமா? உடன் தங்கி இருந்ததால் ஃபில்பியை உளவாளிக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறிவிட முடியுமா? ஆதாரம் வேண்டுமே… வெனோனாவில் ஒரு சிறு குறிப்புகூட இல்லையே. பிரிட்டன் உளவுத்துறை உயரதிகாரிகள் கை பிசைந்து நின்றனர். பர்கெஸின் ரஷ்ய தொடர்புகள் பற்றி ஃபில்பிக்கு எதுவும் தெரிந்திருக்காது. அதனால், உடன் தங்க வைக்க அவர் சம்மதித்திருப்பார். இப்படி சமாதானம் சொல்லிக் கொண்டனர். மேக்லீன் - பர்கெஸ் தப்பித்தலுக்கு உதவிய அந்த மூன்றாவது நபர் யார்? அந்த மூன்றாவது நபர் சிவப்பு ட்ரோஜன் குதிரைதான். அந்த மூன்றாவது கையை அடையாளம் காண MI5 அதி தீவிரமாக களத்தில் இறங்கியது. மேக்லீன் - பர்கெஸ் காணாமல் போனதற்கு கிம் ஃபில்பி நேரடியாக உதவவில்லை. அதற்கான எந்தத் துப்புமில்லை. இருந்தாலும் அவர் வீட்டில்தான் பர்கெஸ் தங்கி இருந்தார். சூழல் ஆதாரங்களின்படி (Circumstantial Evidence) அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். MI5 பிடிவாதமாக நின்றது. இது தங்கள் அமைப்பின் மீது வீண் பழி சுமத்தும் வேலை என MI6 கொதித்திப் போனது. எப்படி தன்னுடைய அமைப்பின் உயரதிகாரி ஒருவரை துரோகி என ஒப்புக் கொள்ள முன்வரும்? வெளியே தெரியாமல் கனன்று கொண்டிருந்த - ஆண்டாண்டு காலமாக நீடித்து வந்த MI5 மற்றும் MI6 அதிகாரிகள் இடையிலான மனக் கசப்பு, மோதலாக வெடித்தது. MI5 என்பது பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான உளவுத்துறை. அமெரிக்காவின் FBI போல. MI6 என்பது வெளிநாடுகளில் பிரிட்டனுக்கு எதிராக நடைபெறும் சதிகளை உளவு பார்க்கும் அமைப்பு. அமெரிக்காவின் CIA போல. “மேக்லீன் மற்றும் பர்கெஸின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? உங்களுக்குத் தெரிந்ததை கூறுங்கள்.” இப்படித்தான் லண்டன் வரவழைக்கப்பட்டார் ஃபில்பி. வந்த பின்புதான் தெரிந்தது, MI5 அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் சிக்கிக் கொண்டோம் என்பது. பொய்யான சாக்குபோக்குகளைக் கூறி அவரை சிக்க வைத்தனர். விசாரணையின் போது ஃபில்பியை புகைப் பிடிக்கக்கூட அனுமதிக்கவில்லை. இதனால் MI5 மற்றும் MI6 அதிகாரிகள் நேரடியாக அதிகார வர்க்க மோதலில் இறங்கினர். அந்த மூன்றாவது கை - சிவப்பு ட்ரோஜன் குதிரை இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (தொடரும்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/literature/ulavan-a-series-on-second-world-war-spy-world-part-fifteen




