சென்னை, இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரத்தப் பரிசோதனை நிலையங்கள் தமிழக அரசின் அரசாணை எண் 41/2026 (13.02.2026), மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் இயங்குதளத்தையும், அதில் பணியாற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பல ஆண்டுகளாகச் சேவை வழங்கி வரும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப இளங்கலை (BMLT), மற்றும் பட்டயப் படிப்பு (DMLT) பயின்ற தொழில் நுட்பனர்கள் பரிசோதனை அறிக்கைகளில் கையொப்பமிடத் தடை விதித்து, எம்.பி.பி.எஸ். அல்லது முதுகலை மருத்துவர்கள் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனக் கூறுவது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும். இது சிறு ஆய்வகங்களின் சுயசார்பை அழித்து, மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். ரத்தப் பரிசோதனை கட்டணம் உயரும் மேலும், பரிசோதனை அறிக்கைகளுக்காக மருத்துவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும் போது, சாதாரண ரத்தப் பரிசோதனைகளின் கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்று வந்த முதன்மை சுகாதாரப் பரிசோதனைச் சேவைகள் பறிபோகும். சிறிய பரப்பளவில் இயங்கும் லேப்களுக்கும் தீயணைப்புத் துறைச் சான்றிதழ் கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகளும், அதிகப்படியான மருத்துவக் கழிவு அகற்றும் கட்டணங்களும் எளிய தொழில் முனைவோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் இந்த அரசாணையானது, லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக சிறிய அளவில் ரத்தப் பரிசோதனை மையங்களை வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான டெக்னீசியன்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களை, கார்ப்பரேட் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் இதர பரிசோதனை நிலையங்களுக்கான கூலித் தொழிலாளிகளாக மாற்றும் நிலையையும் உருவாக்கியுள்ளது. பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்டி, பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை எண் 41/2026-ல் உள்ள சிறு ஆய்வகங்களைப் பாதிக்கும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். அனுபவமிக்க ஆய்வகத் தொழில்நுட்பனர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, பரிசோதனை அறிக்கைகளில் அவர்களே தொடர்ந்து கையொப்பமிடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் துணை மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுமத்தில் (Allied Health Council) ஆய்வகச் சங்கங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களின் போராட்டங்களுக்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-affecting-small-blood-testing-centers-withdraw-immediately-stbi




