சென்னை, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை கலைக்கும் வகையில் மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் நடைபெற்றன. இதற்கு சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்குப் பொறுப்பேற்க கேட்டுத் தொடங்கிய ஒரு குரல், இன்றைக்கு ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாகவும், போராட்டமாகவும் மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஓர் அரசாங்கத்தை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இந்தத் தலைமுறை தெளிவாக சொல்லிவிட்டது. டெல்லி வீதிகள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் தேர்வுக்கு எதிராகக் குரலெழுப்பி தமிழ்நாடு முதல்-அமைச்சரைச் சந்தித்த அறிவு முதல், நீதியைத் தேடும் மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இதை ஒரு நிஜமான மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தோற்றுப்போகும் நமது பொதுக் கல்வி முறைக்கு மத்தியக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அனைவரின் ஆதங்கத்தையே இது காட்டுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது கொடூரமான வன்முறையைப் பிரயோகிப்பது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசிடம் வழியில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது. அடக்குமுறையைக் கொண்டு ஒருபோதும் பொறுப்புக்கூறலை மூடிமறைத்துவிட முடியாது. அதேவேளையில், உலகெங்கும் வாழும் இந்திய இளைஞர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இளைஞருக்குமான போராட்டம் இது. காவல்துறையின் வன்முறைக்கு எதிராகவும், அரசியலமைப்பு தந்த ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வரும் சகோதரர் சந்திர சேகர் ஆசாத் அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர்கள், சமூக போராளிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும், நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டங்களுக்குத் தயக்கமின்றி ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு உண்மையாக சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காக நாம் அனைவரும் உரக்கக் குரலெழுப்புவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/delhi-students-protest-the-collective-anger-of-a-generation-director-pa-ranjith




