மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 5-ம் நாளான இன்று உலவாக்கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில், இறைவனின் திருவிளையாடல்களை நினைவூட்டும் முக்கிய உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலை தொடர்பான அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து ஐந்தாம் நாளான இன்று உலவாக்கோட்டை அருளிய லீலை நடைபெற்றது. உலவாக்கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த சிறப்பு லீலை காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிளையாடல் லீலை இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:- மதுரையில் வாழ்ந்து வந்த அடியார்க்கு நல்லார் என்ற சிவனடியார், தர்மத்தின் திருவுருவாக திகழ்ந்தார். சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே தான் உண்பது என்ற கொள்கையை கொண்டிருந்தார். அவரை சோதித்து அவரது பெருமையை உலகறியச் செய்ய நினைத்த இறைவன் சோமசுந்தரப் பெருமான், அந்த குடும்பத்தில் வறுமையை ஏற்படுத்தினார். வருமானம் இல்லாமல், கையிருப்பு அனைத்தும் தீர்ந்த நிலையிலும் கடன் பெற்று தனது கடமையை நிறைவேற்றி வந்தார் அடியார்க்கு நல்லார். ஒருகட்டத்தில் அவர்களின் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. கடனும் கிடைக்கவில்லை. தனது பட்டினியைவிட அடியவர்களுக்கு தொண்டு செய்யும் தனது கடமையை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனதை எண்ணி வேதனை அடைந்தார். இதனால், வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த அவர், தன் மனைவியுடன் சோமசுந்தரர் கோவிலுக்கு சென்றார். இறைவனை தரிசனம் செய்த அவர், 'உனது அடியவர்களுக்கு சேவை செய்ய முடியாத நாங்கள் வாழ்ந்து என்ன பயன்? எங்களின் உயிரை எடுத்துக்கொள்' என கதறினார். மேலும் அவர்களை சோதிக்க விரும்பாத இறைவன், அசரீரியாக தோன்றி "வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம். அதைக்கொண்டு எனது அடியவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்" என்று கூறினார். உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். இறைவன் கூறியபடியே இருவரும் வீடு திரும்பி, உலவாக்கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது. அடுத்த நிகழ்வுகள் திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (21-ந் தேதி) பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு சுந்தரேஸ்வரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 24 ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 25 ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 26 ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். 27-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/madurai-meenakshi-amman-temple-aavani-moolam-festival-ulavakottai-aruliya-leelai



