சென்னை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை கொடுங்கையூர் வடக்கு கால்வாயில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை இன்று (21.08.2026) தண்டையார்பேட்டை மண்டலம், முத்தமிழ் நகர் 2-வது பிளாக்கில் உள்ள கொடுங்கையூர் வடக்கு கால்வாயின் தொடக்க இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார், செயற்பொறியாளர் எஸ்.ஹரிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கொடுங்கையூர், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், கேப்டன் காட்டன், டிரஸ்ட்புரம், ரெட்டிகுப்பம், பள்ளிக்கரணை, செக்ரடரியேட் காலனி உள்ளிட்ட 81.81 கி.மீ. நீளத்திலான 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று (21.08.2026) கொடுங்கையூர் வடக்கு கால்வாய், வீராங்கல் ஓடை மற்றும் மேற்கு மாம்பலம் கால்வாயில் இந்த டிரோன் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. களஆய்வை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள, தினசரி சுமார் 4 முதல் 5 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு, கால்வாய்கள் கட்டம் வாரியாக ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு டிரோனுக்கும் குறிப்பிட்ட கால்வாய் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஆய்வின் முன்னேற்றம் மற்றும் பெறப்படும் தரவுகள் முறையாக கண்காணிக்கப்படும். ஆய்வின் மூலம் பெறப்படும் அனைத்து படங்கள், காணொலிகள் மற்றும் புவியியல் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கால்வாய்களின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் GIS அடிப்படையிலான தரவுத்தளம் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்படும். இதனடிப்படையில், பருவமழைக்கு முன்னதாக கால்வாய்களில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாருதல், அடைப்புகளை அகற்றுதல், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீரோட்டத்தைத் தடையின்றி உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins




