சென்னை, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழக அரசு விரைவில் தள்ளப்படலாம். ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு. ஆனால் இதே காலகட்டத்தில், இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரபிரதேசம் +19%, மராட்டியம் +8%, தமிழகம் மட்டும் -1%. சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும். ஏனென்றால், தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு. ‘ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்துக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது’ என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழகம் மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை. இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா? அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான். இந்த -1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழகம் தாங்க முடியாது. இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-in-gst-will-the-tvk-government-wake-up-trb-rajaa-question




