கோவை, மாநகராட்சி கூட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என கூறி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கேள்வி எழுப்பினார். காரசார வாக்குவாதம் தொடர்ந்து வார்டுகளில் மாநகராட்சி முகாம்கள் நடப்பது பற்றி தங்களுக்குத் தகவல் அளிப்பதில்லை என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் கூறி ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் இருதரப்பும் இணைந்து மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் மாமன்றத்தை புறக்கணிப்போம் என வாக்குவாதம் செய்தனர். அதே நேரத்தில், செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி, அது குறித்து மேயர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தார். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் வாக்குவாதம் இந்த தள்ளுமுள்ளுவின் போது திமுக பெண் கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. அதனையும் மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். மற்றொரு புறம், சிபிஐ மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அவர்களும் தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலும் நடைபெற்ற முற்றுகை, கடுமையான கூச்சல் குழப்பம் மற்றும் அமளி காரணமாக, கூட்டம் ஒரு மணி நேரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்டு இதனைத் தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 5 பேரை 2 மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்வதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட அமளியால் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-coimbatore-corporation-meeting-5-councilors-suspended




