மதுரை, பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நாகர்கோவில் காசி நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 35). இவர் சமூக வலைதளங்கள் மூலமாக இளம்பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக 2020-ம் ஆண்டில் புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன. ஆபாச வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் அதே ஆண்டில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த மடிக்கணினி, செல்போன்களில் இளம்பெண்கள், மாணவிகள் தொடர்பான 400-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாண புகைப்படங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு நாகர்கோவில் விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை (இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை) விதித்து 2023-ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து காசி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி இந்த தண்டனையை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:- திட்டமிட்ட காதல் மோசடிக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். இளம் பெண்களின் நம்பிக்கை, உணர்வுப்பூர்வமான பலவீனம், பொருளாதார தேவை ஆகியவற்றை மனுதாரர் தனக்கு சாதகமாக எல்லா வழிகளிலும் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இந்த இழிவான செயலை மனுதாரர் வஞ்சகமாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார். அவரின் செயல்பாடு என்பது பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளி என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை இந்த கோர்ட்டு உறுதி செய்கிறது. சிறுமிகள், பெண்கள் இளம் தலைமுறையினர் இணையதளம், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டிஜிட்டல் உலகில் தங்களின் அந்தரங்கத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொள்ளும்படி ஒவ்வொரு சிறுமியையும், பெண்களையும் இந்த கோர்ட்டு மரியாதையுடன் கேட்டுக்கொள் கிறது. (இது சம்பந்தமான சில வரிகளை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது). வக்கிரமான வீடியோ டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் நாம், வழக்கு விசாரணைகளின்போது வன்முறை சம்பவங்களை நேரடியாக பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டுகளில் மனிதர்களின் மோசமான நடத்தை சம்பவங்களை வீடியோக்கள், புகைப்படங்களாக சமர்ப்பிக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்த பெண் போலீஸ் அதிகாரி, வக்கிரமான வீடியோ, புகைப்படங்களை பலமுறை அலசி ஆராய வேண்டியிருந்தது. அவரை போல அரசு வக்கீல்கள், நீதிபதிகளும் இந்த ஆவணங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் அதிகாரிகள் இயற்கைக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட இந்த அமைப்பு கட்டாயப்படுத்துகிறது. உளவியல் பாதிப்பு பகுத்தறிவு மனம், "இது ஒரு வழக்கிற்கான ஆதாரம் மட்டுமே” என்று கூற முயல்கிறது, ஆனால் மூளையின் ஆழமான, பரிணாம வளர்ச்சியடைந்த பகுதிகள், ஒரு நேரடி, கொடூரமான தாக்குதலை மீண்டும், மீண்டும் காண்பது போல் உணர்கின்றன. அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் ஆதாரங்களை மீண்டும், மீண்டும் பார்ப்பது, உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கான பயிற்சியின் மூலம் இவர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-kasi-must-remain-in-prison-until-his-death-high-courts-stern-order




