விமானம் என்றாலே பிரமாண்டமான விமான நிலையம், நீண்ட ஓடுபாதை, கட்டுப்பாட்டு கோபுரம் என நம் கண்முன் ஒரு காட்சி விரியும். ஆனால், உலகில் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு விமான நிலையம் இருக்கிறது. இங்கு கான்கிரீட் ஓடுபாதை இல்லை. தார் சாலை இல்லை. மாறாக, கடற்கரையின் மணல் பரப்பே விமானங்களின் ஓடுபாதை! ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பார்ரா தீவில் அமைந்திருக்கும் பார்ரா விமான நிலையம், உலகின் மிக வித்தியாசமான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது. மணல் பரப்பில் தரையிறங்கும் விமானங்கள்! பார்ரா தீவில் உள்ள ‘ட்ராக் மோர்’ (Traigh Mhor) கடற்கரையே இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையாக பயன்படுத்தப்படுகிறது. பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் உலகின் ஒரே கடற்கரை ஓடுபாதை கொண்ட விமான நிலையம் என்ற தனிச்சிறப்பும் இதற்கு உண்டு. இங்கிருந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் விமான சேவை இயக்கப்படுகிறது. தீவில் வசிக்கும் மக்களுக்கு வெளி உலகத்துடனான முக்கியமான போக்குவரத்து இணைப்பாகவும் இந்த விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அலைதான் விமான நிலையத்தின் ‘நேரக் காவலன்’! பார்ரா விமான நிலையத்தின் மிகப்பெரிய வியப்பு இதன் ஓடுபாதைதான். சாதாரண விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம் அட்டவணைப்படி நிர்ணயிக்கப்படும். ஆனால், பார்ராவில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. கடல் அலைதான் இங்கு விமான சேவையின் நேரத்தை தீர்மானிக்கிறது. கடல் அலை உயர்ந்து நீர்மட்டம் அதிகரிக்கும் நேரத்தில், ஓடுபாதையாக பயன்படுத்தப்படும் கடற்கரை பகுதி முழுவதும் கடல் நீரில் மூழ்கிவிடும். இதனால், அலைகளின் நேரம் மற்றும் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டே விமானங்களின் இயக்கம் திட்டமிடப்படுகிறது. முக்கோண வடிவில் 3 ஓடுபாதைகள்! இந்த கடற்கரையில் மூன்று ஓடுபாதைகள் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தரையிறங்கும்போது காற்றின் திசை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நேரத்தில் நிலவும் காற்றின் திசை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான ஓடுபாதை தேர்வு செய்யப்படுகிறது. இயற்கையின் விதிகளுடன் இணைந்து செயல்படும் இந்த விமான நிலைய அமைப்பு, விமானப் போக்குவரத்து உலகில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விமானம் இல்லாத நேரத்தில். மீண்டும் பொதுமக்களின் கடற்கரை! இந்த விமான நிலையத்தின் மற்றொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? விமானங்கள் இயக்கப்படாத நேரங்களில், ஓடுபாதைகள் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரையாக மாறிவிடுகின்றன. அதாவது, ஒரே இடம் ஒரு நேரத்தில் விமான நிலையமாகவும், மற்றொரு நேரத்தில் அழகிய கடற்கரையாகவும் செயல்படுகிறது. விமானம் வரும்போது கடற்கரையில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுகின்றனர். இயற்கையுடன் கைகோர்த்த விமானப் போக்குவரத்து! நவீன தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும், இயற்கையின் அமைப்பையே ஓடுபாதையாக பயன்படுத்தி விமானங்களை இயக்குவது வியப்பை ஏற்படுத்துகிறது. கடல், மணல், காற்று, அலை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொண்டு செயல்படும் பார்ரா விமான நிலையம், மனிதனின் தொழில்நுட்பத்துக்கும் இயற்கையின் சக்திக்கும் இடையிலான வித்தியாசமான கூட்டணியாக திகழ்கிறது. உலகையே வியக்க வைக்கும் கடற்கரை விமான நிலையம்! வானில் பறக்கும் விமானம். கீழே விரிந்திருக்கும் மணல் கடற்கரை. அதை நோக்கி வரும் கடல் அலைகள். இந்த காட்சி பார்ப்பதற்கே திரைப்படக் காட்சியைப் போல் தோன்றலாம். ஆனால், இது நிஜம்! இயற்கையையும் விமானப் போக்குவரத்தையும் ஒருங்கிணைத்து செயல்படும் பார்ரா விமான நிலையம், அதன் தனித்துவம் காரணமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/is-this-an-airport-or-a-beach-an-amazing-runway




