வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் கல்வி பயின்ற இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர். சாரதா மேனன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மனநல விழிப்புணர்வையும் மனநல மறுவாழ்வுத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களையும் ஏற்படுத்தியவர். மங்களூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்த மங்களூர் சங்கரநாராயண மேனன்- கல்யாணி அம்மாள் தம்பதியினருக்கு எட்டாவது மற்றும் கடைசிப் பிள்ளையாக பிறந்தார். இவருக்கு ஐந்து மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் இருந்தனர். இவரது தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவர்களது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. இதனால் சாரதா மேனனின் கல்வி பெரும்பாலும் சென்னையிலேயே அமைந்தது. சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி மற்றும் கிறிஸ்ட் சர்ச் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சாரதா மேனன் சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற வுமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை முடித்ததும் அவருக்குக் கல்லூரியில் அறிவியல் பிரிவு கிடைக்கவில்லை, வரலாற்றுப் பிரிவுதான் கிடைத்தது. ஆனால், அவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தது. இதனால், கல்லூரி முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, "வரலாறு என் தந்தைக்காக, அறிவியல் எனக்காக" என, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய இரு பிரிவுகளையும் ஒரே நேரத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார். 1942-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சாரதா மேனன் 1947-ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். டெல்லியின் இர்வின் மருத்துவமனையில் (தற்போதைய லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை) பயிற்சியை முடித்த பிறகு, 1957-ஆம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் (NIMHANS - National Institute of Mental Health and Neurosciences) மருத்துவக் கல்லூரியில் மனநலம் சார்ந்த டி.பி.எம் (DPM-Diploma in Psychiatric Medicine) படிப்பை 1959-ஆம் ஆண்டில் முடித்து, இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் ஆனார். 1951-ஆம் ஆண்டு 'மெட்ராஸ் மெடிக்கல் சர்வீஸ்' அதிகாரியாகப் பொறுப்பேற்ற மருத்துவர்.சாரதா மேனன், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பீத்தபுரம் மிஷன் மருத்துவமனையில் தனது பணியைத் தொடங்கினார். 1959-ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவராக பொறுப்பேற்றுக்கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மருத்துவமனையின் முதல் பெண் கண்காணிப்பாளராக 1961-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மருத்துவர்.சாரதா மேனன் 1978-ஆம் ஆண்டு வரை சுமார் 18 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார். தான் பொறுப்பேற்கும் வரை நோயாளிகளுக்கான புகலிடமாக மட்டுமே விளங்கிய மருத்துவமனையை ஒரு நவீன சிகிச்சை மையமாக மாற்றிய பெருமை சாரதா மேனனையே சாரும். மருத்துவமனையில் முதன்முதலாகத் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்கி, மக்கள் எளிதாக வந்து மனநல ஆலோசனை பெற வழிவகை செய்தார். குணமடைந்த நோயாளிகள் சுயசார்புடன் வாழ ஏதுவாக, பொம்மைகள் செய்தல், பைகள் தயாரித்தல், பேக்கரி போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 'தொழிலக மறுவாழ்வு மையத்தை' மருத்துவமனையில் நிறுவினார். மனநலத் துறையில் முதன்முறையாகப் தொழில்முறைச் சமூகப் பணியாளர்களை (Professional Social Workers) நியமித்து, நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் 'மனநலப் பிரிவுகள்' தொடங்கப்படக் காரணமாக இருந்தார். 1978-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மருத்துவர்.சாரதா மேனன் தனது 98-ஆவது வயது வரை தொடர்ந்து பணியாற்றினார். மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினியா) மற்றும் இதர கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்க, சில சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மருத்துவர்.சாரதா மேனன் 1984-ஆம் ஆண்டு 'ஸ்கார்ஃப்- ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையை (SCARF-Schizophrenia Research Foundation)’ சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நிறுவினார். மனநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மிகச்சில கூட்டு மையங்களில் (Collaborating Centre) இதுவும் ஒன்றாகும். மனநல நோயாளிகளை விட, அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தினர் அடையும் மன உளைச்சல் அதிகம் என்பதை உணர்ந்த மருத்துவர்.சாரதா மேனன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து, அவர்களுக்கு பரஸ்பர தைரியத்தையும், ஆலோசனைகளையும் வழங்க 'ஆஷா' (AASHA) என்ற அமைப்பை உருவாக்கினார். இன்றும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. சர்வதேச மனநல மறுவாழ்வுக்கான உலக அமைப்பின் (World Association for Psychosocial Rehabilitation - WAPR) பொதுச் செயலாளராகவும் அதன் இந்தியப் பிரிவின் நிறுவனராகவும் பொறுப்பு வகித்த மருத்துவர்.சாரதா மேனன் இந்திய மனநல மருத்துவ முறைகளை உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தார். சென்னையில் தெருக்களில் ஆதரவற்று அலையும் மனநல பாதிப்புடைய பெண்களை மீட்க உருவான 'தி ஃபேனியன்' (The Banyan), 'அன்பகம்' போன்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பின் நின்று ஒரு தாயைப் போல் ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டினார். தனது 97-ஆவது வயதிலும் கூட தன் மின்னஞ்சலைத் தானே சரிபார்த்து, 'ஸ்கைப்' செயலி வழியாக கணினித் திரையின் வழியே பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளிக்கும் அளவுக்கு நவீனத் தொழில்நுட்பங்களை லாகவமாகக் கையாண்டார். இறுதிவரை மனநலச் சேவைகளுக்காகவே உழைத்த மருத்துவர்.சாரதா மேனன் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். 1992-ஆம் ஆண்டு சமூக சேவை மற்றும் மருத்துவத் துறைக்காக இந்திய அரசின் பத்ம பூஷண் விருதையும் 2016-ஆம் ஆண்டு தமிழக அரசின் பெண்களுக்கான உயரிய அவ்வை விருதையும் பெற்றார். திருமணம் செய்து கொள்ளாமல் குடும்ப வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு, மனநல மருத்துவத்தையும், ஆதரவற்ற மனநல நோயாளிகளின் மறுவாழ்வையுமே தனது முழுநேர வாழ்வாகவும் குடும்பமாகவும் ஏற்றுக்கொண்ட மருத்துவர். சாரதா மேனனின் பணி வெறும் மருத்துவச் சேவையோடு நிற்காமல், மனநலத் துறையையே நவீனமயமாக்கிய ஒரு நிர்வாகப் புரட்சியாக அமைந்தது. மருந்துச் சீட்டு எழுதுவதோடு மருத்துவர்களின் கடமை முடிந்தது என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு நோயாளியின் குடும்பச் சூழல், சமூகம், பொருளாதாரம் மற்றும் மறுவாழ்வு அனைத்தையும் உள்ளடக்கிய 'முழுமையான மனநலச் சிகிச்சை' (Holistic Psychiatric Care) முறையை இந்தியாவில் நிலைநிறுத்தியதே மருத்துவர்.சாரதா மேனன் அவர்களின் ஆகச்சிறந்த சாதனையாகும். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/literature/the-indomitable-spirit-and-legacy-of-a-medical-visionary




