Articolo completo
கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான ‘அம்மா’வில் 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதை முறியடித்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் அமைந்த 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக் குழு பதவியேற்று 10 மாதங்களில் கலைந்துள்ளது. நடிகர் திலீப் மற்றும் சித்திக் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்குப் பிறகு, மோகன்லால் தலைமையிலான முந்தைய நிர்வாகக் குழு ராஜினாமா செய்தது. தேர்தலில், ஸ்வேதா மேனனை தலைவராகக்கொண்டு, குக்கூ பரமேஸ்வரன் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றனர். இதற்கிடையே தலைவர் ஸ்வேதா மேனனுக்கும், பொதுச் செயலாளருக்கும் இடையே அதிகாரப் போட்டி தொடங்கியது. ஸ்வேதாவிற்குத் தெரியாமல் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரனும், பொருளாளர் உன்னி சிவபாலும் இணைந்து அலுவலக மேலாளர் அதுல்யாவை பணிநீக்கம் செய்தனர். இது கடும் சர்ச்சையானது. சர்ச்சையின் முடிவில் பெண் மேலாளர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். அத்துடன் பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வு சங்கத்தில் சர்ச்சைக்கு வித்திட்டது. AMMA - மோகன்லால் இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம், இணைச் செயலாளர் அன்சிபா ஹசன் ராஜினாமா செய்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களான டினி டோம் மற்றும் லட்சுமி பிரியாவுக்கு எதிராக அவர் போலீஸில் புகார் அளித்தார். அம்மா அமைப்பு நோட்டீஸ் அனுப்பியும் அன்சிபா ஹசன் புகாரை வாபஸ் பெறவில்லை. இதற்குப் பதிலடியாக லட்சுமி பிரியாவும் அன்சிபா மீது புகார் அளித்தார். இது இரண்டாவது சர்ச்சையாக உருவெடுத்தது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப விழாவிற்காக ஒரு கோயில் அறக்கட்டளையிடமிருந்து ரூ.70 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டது. அந்த தொகையை பெறக்கூடாது என அன்சிபா ஹசன் உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையே அந்த தொகைக்கான கணக்குகளை முறையாகச் சமர்ப்பிக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது. இது மூன்றாவது சர்ச்சையாகும். நடிகை ஸ்வேதா மேனன் இதைத்தொடர்ந்தே அம்மா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று காக்கநாட்டில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு மோகன்லால் தவிர பிற முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த பொதுக்குழுவில் குடும்ப சங்கமம் விழாவிற்கான ரூ. 67 லட்சத்திற்கான கணக்குகள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. மேலும், பாபுராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இந்த தீர்மானத்தில் தான் நடுநிலை வகிப்பதாக மோகன்லால் அறிவித்தார். அதேசமயம் நிர்வாகக்குழுவுக்கு இடையே நடந்த சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் கூட்டாக ராஜினாமா செய்தது. ஸ்வேதா மேனன் தனது உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து ரமேஷ் பிஷாரடி எம்.எல்.ஏ ஒருங்கிணைப்பாளராக ஒரு தற்காலிகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜகதீஷ், கே.பி.கணேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு பொதுக்குழு கூடி கணக்குகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto

