புதிது புதிதாகச் சிந்தித்து விதவிதமாக வலைகளை விரிக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள். ஆனாலும் கொஞ்சம்கூட விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் போய் சிக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் நடந்துள்ள கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி, இந்தியா முழுவதுமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருக்கின்றன. சுமார் ரூ.400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. 20 பேர் கைது செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரக் குற்றப்பிரிவு இந்த மோசடி பற்றி விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ‘ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 45 நாளில் ரூ.2 லட்சம்’ என்ற ஆசை வார்த்தைதான் இந்த மோசடி வலையின் முக்கியமான தூண்டில். கிரிப்டோகரன்சி வர்த்தகம், பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் குழுக்கள், MLM முறையில் புதிய முதலீட்டாளர்களைச் சேர்த்தல் என அத்தனை ஆசையூட்டும் அம்சங்களையும் இதில் பயன்படுத்தியுள்ளார்கள் மோசடியாளர்கள். மக்களின் பேராசையை நம்பிக்கையாக மாற்றி, பெரும்தொகையை அறுவடை செய்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது மோசடிக் கும்பல். அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் குவிந்திருக்கிறாரகள், முதலீட்டாளர்கள். இந்த மோசடிக் கும்பல் பணத்தை ரொக்கமாகவும் யுபிஐ வழியாகவும் பெற்று கிரிப்டோ சொத்துகளாக மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. Binance உள்ளிட்ட வெளிநாட்டு கிரிப்டோ வாலெட்டுகள் வரையிலும் சந்தேகத்தின் வேர் நீள்கிறது. இதனால் பணத்தின் தடத்தைப் பின்தொடர்வதும், இழந்த பணத்தை மீட்பதும் சிக்கலாகியுள்ளது. இந்த மோசடிக்குப் பிறகாவது அரசும் மக்களும் பாடம் கற்க வேண்டும். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கும் வகையில் அரசு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு வங்கிகள், யுபிஐ அமைப்புகள், கிரிப்டோ தளங்கள், காவல்துறை, நிதி ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவை இணைந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, முதலீடு செய்யும் மனநிலையில் இருந்து மக்கள் வெளிவரவேண்டும். முதலீட்டில் லாபத்தைத் தேடுவது தவறில்லை. ஆனால், அதற்கு முன்பு உண்மையைத் தேடுங்கள். முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது தவறல்ல. ஆனால், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தேடிப்போய் மோசடியில் சிக்குவது முட்டாள்தனமானது. நிதி நிர்வாகத்தில் விழிப்புணர்வும் பொறுப்புணர்வுமே முக்கியம்! - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/money/madurai-dindigul-cryptocurrency-fraud



