சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதைவிட குறைவான நீரையே கர்நாடகம் வழங்கியுள்ளது. ஜூன் மாதம் முதல் காவிரியில் வழங்க வேண்டிய நீரில் இதுவரை 55 டி.எம்.சி. நீரை பாக்கி வைத்துள்ள கர்நாடக அரசு, ஆணையம் அறிவுறுத்திய குறைந்த அளவு நீரைக் கூட வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி பல நாள்கள் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. ஆனால் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் அதற்கும் குறைவான அளவு தண்ணீர்தான் பிலிகுண்டுலு அளவை நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி நீர் வரவேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வர வேண்டிய நிலையில், 27ஆம் தேதி 7,454 கனஅடி, 28 ஆம் தேதி 7,094 கனஅடி, 29 ஆம் தேதி 6,702 கனஅடி, 30 ஆம் தேதி 6,887 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இந்த நாள்களில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 13,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு கூறிவருகிறது. ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் பிலிகுண்டுலு பகுதிக்கு தண்ணீர் வந்திருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலு வரும் வரை பயணப் பாதையில் 1% முதல் 2% வரை நீர் இழப்பு ஏற்படவாய்ப்புள்ளது. ஆனால் தினமும் 20% முதல் 25% வரை குறைவாகவே தண்ணீர் வந்திருப்பதை ஏற்க முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதாக கணக்குக் காட்டிவிட்டு, அந்த நீரை வேறு பயன்பாட்டுக்கு கர்நாடகம் திருப்பிவிட்டு விட்டதோ? என்ற ஐயம் எழுகிறது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதத்தில் 27ஆம் தேதி வரை 40.10 டி.எம்.சி. என மொத்தம் 80.50 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜூன் மாதம் 2.91 டி.எம்.சி., ஜூலை மாதம் 0.71 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வரை 21.9 டிஎம்சி என மொத்தம் 25.58 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. ஜூன் மாதம் முதல் இதுவரை கர்நாடகம் 55 டிஎம்சி நீரை பாக்கி வைத்துள்ளது. இன்றைய நிலையில், கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் 82 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மனம் இல்லை. இப்போதே இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டிய பிறகு எத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்கும் என்பதை யூகித்து பார்த்தாலே கர்நாடகத்தின் சதித்திட்டங்களை புரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து தான் மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இப்போதுள்ள 52 டி.எம்.சி. நீரைக் கொண்டு 40 நாள்களுக்குக் கூட தண்ணீர் வழங்க முடியாது. கர்நாடகத்திடம் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைப் பெறாவிட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை காப்பாற்ற முடியாது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கச் செய்து, கர்நாடகத்தின் துரோகத்தை எடுத்துரைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-highlight-karnatakas-betrayal-in-the-supreme-court-anbumani-ramadoss




