சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது என்று கூறும் மத்திய அரசு, அதே இளைஞர்கள் தங்களின் கல்வி உரிமையையும் எதிர்காலத்தையும் காக்க அமைதியான முறையில் போராடும்போது, அவர்களைத் தடியடியாலும், கண்ணீர் புகைக் குண்டுகளாலும் எதிர்கொள்வது சரியான ஜனநாயகம் அல்ல. அது சர்வாதிகாரமாகும். டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாக வந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொடூரமானத் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நீட் தேர்வு அறிமுகமான நாளிலிருந்தே வினாத்தாள் கசிவு, முறைகேடு குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள், மறுதேர்வுகள் எனத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 2024-ஆம் ஆண்டு மறுதேர்வு நடத்த வேண்டிய நிலையும், 2026-ஆம் ஆண்டு தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்ட நிலையும், இந்தத் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் அனிதா, விக்னேஷ், மதுரை மாவட்டம், ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி மாவட்டம், ஆதித்யா, நாமக்கல் மாவட்டம், மோதிலால் என இன்னும் பல மாணவர்களின் உயிர்கள், நீட் தேர்வு தொடர்பானக் கடுமையான மனஅழுத்தச் சூழல்களால் பறிபோயுள்ளன. இன்று டெல்லியில் ஒலிக்கும் இளைஞர்களின் குரல், டெல்லி மாணவர்களின் குரல் மட்டுமல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் இளைஞர்களின் குரலாகும். குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை, ஜனநாயக வழியில் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. மத்திய அரசு, 140 கோடி மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவியும் நிவாரணமும் வழங்க வேண்டும் எனவும், மாணவர்களின் எதிர்காலத்தைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிவரும் நீட் தேர்வை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/baton-charge-on-students-in-delhi-neet-exam-should-be-cancelled-immediately-velmurugan




