நம் வாழ்வில் மிகவும் போற்றி வணங்கக்கூடியவர்களை மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் வரிசைப் படுத்தி வைத்துள்ளனர். இதில் தாய், தந்தைக்கு பிறகு முக்கியத்துவம் பெற்றவராக ‘குரு’ எனும் ஆசிரியர் உள்ளார். தெய்வத்திற்கு முன்னதாக குருவை வைத்து போற்றுவதன் மூலம் குரு பக்தியின் அவசியத்தை நம்மால் உணர முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற்று, மிகவும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் குருவின் ஆசியும், அருளும் தேவை. அந்த குருவின் ஆசியை பரிபூரணமாக பெற்றவர்தான் ஏகலைவன். குரு துரோணாச்சாரியார் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருவாக திகழ்ந்தவர் துரோணாச்சாரியார். இவர் சிறந்த வில்வித்தை ஆசிரியர். பஞ்சபாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் வில்வித்தைகளை கற்றுக்கொடுத்தார். குறிப்பாக பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ச்சுனனை அனைவரையும்விட சிறந்த வில்லாளன் ஆக்குவேன் என்று சபதம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயம் காட்டில் ஏகலைவன் என்ற வேடன் வசித்து வந்தான். அவனுக்கு, தான் சிறந்த வில்லாளன் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆகவே, சிறந்த வில்வித்தை ஆசிரியரான துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை கற்க எண்ணினான். ஒரு நாள் துரோணரிடம் சென்று, தன்னை சீடனாக ஏற்றுக் கொண்டு வில்வித்தை கற்றுத் தருமாறு வேண்டினான். தளராத தன்னம்பிக்கை ஆனால் துரோணர், அரச வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே போர் பயிற்சி கற்பிப்பதாக உறுதி பூண்டிருந்தார். ஏகலைவன் வேடுவர் குலம் என்பதால், அவனை சீடராக ஏற்க மறுத்தார். இதனால் ஏகலைவன் மிகவும் வருந்தினான். இருப்பினும், தன்னம்பிக்கையை கைவிடாத ஏகலைவன், துரோணரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். துரோணரின் திருவுருவச் சிலையை வடித்து, அதன்முன் தினமும் வில்வித்தை பயிற்சியை மேற்கொண்டான். குருவின் ஆசி தனக்கு முழுமையாக இருப்பதாக நம்பினான். அவனது ஆர்வமும், விடாமுயற்சியும் அவனை குறுகிய காலத்திலேயே சிறந்த வில்வித்தை வீரனாக மாற்றியது. துரோணரை வியப்பில் ஆழ்த்திய ஏகலைவன் ஒரு முறை பாண்டவர்களும், கவுரவர்களும் காட்டிற்கு சென்றபோது, அர்ச்சுனன் ஏகலைவனின் வில்வித்தை திறனை பார்த்து வியந்தான். அர்ச்சுனன் ஏகலைவனிடம், 'உன் குரு யார்?' என்று கேட்டபோது, அவன் துரோணாச்சாரியார் என்று கூறினான். இது பற்றி துரோணாச்சாரியாரிடம் அர்ச்சுனன் தெரிவித்தான். அதைக் கேட்டதும் குழப்பம் அடைந்த துரோணர், ஏகலைவனை காணப் புறப்பட்டார். ஏகலைவன் இல்லத்திற்கு சென்ற துரோணர், அங்கு தன் சிலை இருப்பதை கண்டு வியந்தார். மேலும், தன் சிலை முன்பாக நின்று ஏகலைவன் பயிற்சி பெற்றதையும் அறிந்தார். துரோணரை பார்த்த ஏகலைவன் பணிந்து வணங்கினான். ஏகலைவனிடம், “உண்மையாக என்னை குருவாக நினைக்கிறாயா” என்று துரோணர் கேட்டார். ஏகலைவன், "ஆம் குருவே” என்றான். கட்டை விரலை தட்சணையாக கொடுத்த ஏகலைவன் உடனே துரோணர், குரு தட்சணையாக ஏகலைவனின் வலது கை கட்டை விரலை கேட்டார். வலது கை கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை புரிவது சாத்தியமில்லை என்பதை ஏகலைவன் அறிவான். இருப்பினும், குருவிற்காக சிறிதும் யோசிக்காமல் வலது கை கட்டை விரலை வெட்டி கொடுத்தான். ஏகலைவனின் குரு பக்தியை பார்த்து மெய்சிலிர்த்த துரோணர், "ஏகலைவா, குரு பக்தி என்ற சொல்லுக்கு நீயே சிறந்த உதாரணம். உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்திருக்கும்” என்று ஆசி கூறி அங்கிருந்து புறப்பட்டார். இந்த நிகழ்வின் மூலம் துரோணர் மிகவும் கொடூரமான, சுயநல குருவாக தோன்றக்கூடும். ஆனால் துரோணர், தன் மீது பழியை ஏற்படுத்திக்கொண்டு, சீடனின் சிறந்த தகுதியை உலகிற்கு உணர்த்தியதாக கூறலாம். துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை குரு தட்சணையாக கேட்காமல் இருந்திருந்தால் ஏகலைவன் சிறந்த வில்லாளனாக இருந்திருக்கலாம். ஆனால் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக விளங்கக் கூடிய அழியாப் புகழ் ஏகலைவனுக்கு கிடைத்திருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/ekalavya-is-known-for-his-dedication-to-archery-and-devotion-to-dronacharya




