சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் 5 பேர் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காக பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சர்ச்சையில் தமிழக அரசின் முடிவை விமர்சித்து கடந்த 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், அதனடிப்படையில் மட்டும்தான் அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, கவர்னரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். தமிழக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்" என்று எச்சரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதிக்கு துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், அதை அரசு செய்யவில்லை. மாறாக, தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பது சட்டவிரோதம் என்ற பழியை மட்டும் போக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்த அரசு முன்வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகளை சாதாரணமாக இல்லாமல் சட்டபூர்வமாக தாரை வார்த்துக் கொடுக்கும் செயலாகும். மாநில அரசின் உரிமை தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமை போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளியாக அமைந்து விடும். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கா, மாநில அரசுக்கா என்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் தமிழக அரசின் விருப்பப்படியே துணைவேந்தர்களை நியமிக்க முடியும். அவ்வாறு இருக்கும்போது அவசரப்பட்டு நமது உரிமைகளை தாரை வார்க்கத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடல் குழுவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்தும் முடிவைக் கைவிட வேண்டும். மாறாக, துணைவேந்தர் நியமன அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கில் வெற்றி பெற்று உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/amend-laws-to-include-ugc-representative-in-vice-chancellor-search-committee-anbumani-condemns




